×

ஜோலார்பேட்டையில் வாணியம்பாடி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டையில் வாணியம்பாடி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி - திருப்பத்தூர் நெடுஞ்சாலை முக்கிய நகரங்களையும் தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் முக்கிய பிரதான சாலையாக இருந்து வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் தொழில் ரீதியாக ஏற்றுமதி இறக்குமதி செய்யும் கன்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்தும் நிலை உருவானது. மேலும் சென்னையில் இருந்து வாணியம்பாடி வழியாக தேசிய நெடுஞ்சாலையானது கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் மற்றும் தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் செல்கின்றன.

இதனால் சேலம், ஈரோடு, கோவை, செல்லும் வாகனங்கள் பல கிலோமீட்டர் தொலைவில் சுற்றி செல்வதால் போக்குவரத்து செலவு அதிகரிப்பதோடு நேரமும் விரையம் ஆகிறது. இதனால் வாணியம்பாடியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வரை கடந்த 2020-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு சுமார் 300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை வரை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டாக நடைபெற்று வருகிறது. வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வரை 85 சதவீதம் பணி முடிவடைந்த நிலையில் ஒரு சில இடங்களில் கல்வெட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஆங்காங்கே சாலை அமைக்கும் பணி தாமதம் ஏற்பட்டு வருவதால் கல்வெட்டு அமைக்கும் பணியை தீவிர படுத்த வேண்டும். இதுதவிர, ஜோலார்பேட்டையில் உள்ள பக்கிரித்தக்கா முதல் கோடியூர் வரை சாலை விரிவாக்கம் பணி மேற்கொள்ளாமல் தாமதமாக நடைபெற்று வருகிறது.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வரும் வாகனங்கள் ஜோலார்பேட்டை பகுதியில் விரைந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலை ஓரங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களின் ஆக்கரமிப்புகளை அகற்றப்படாமல் இருந்து வருவதாலும், சாலையை விரைந்து முடிக்காததாலும் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு ஜோலார்பேட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vaniyambadi ,Tirupathur ,National Highway ,Jolarpettai , Vaniyampadi-Tirupathur National Highway work in Jollarpet should be completed quickly: public demand
× RELATED நண்பர்களுடன் பணம் கட்டி சீட்டு விளையாடிய நபர் கைது