விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலை தொடர்ந்து அடுத்து வருகிறது ஐஎன்எஸ் விஷால்: சீனாவுக்கு பதிலடி கொடுக்க அதிரடி

புதுடெல்லி: இந்தியாவை சுற்றி சீனா, பாகிஸ்தான் ஆகியவை எதிரி நாடுகளாக இருக்கின்றன. இது தவிர, நேபாளம் போன்ற குட்டி நாடுகளும் அவ்வப்போது சீனா, பாகிஸ்தானின் பேச்சை கேட்டு, இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்றன.  எனவே, இந்த சவால்களை சமாளிக்கவும், உலகளவில் வல்லரசு நாடாக உருவாகவும் ராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியில் ஒன்றிய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்தே இதற்கான எதிர்கால திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, உருவானது தான் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல். கடந்த 2005ம் ஆண்டு முதல், 76 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட இது, நேற்று முன்தினம் கடற்படையில் இணைக்கப்பட்டது.

இதன் மூலம், விமானம் தாங்கி கப்பலை சுயமாக தயாரிக்கும் திறன் படைத்த 5 வல்லரசு நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. ராணுவ பலத்தில் ஏற்கனவே இங்கிலாந்தையும் பின்னுக்கு தள்ளி விட்டது.

தற்போது, ஏற்கனவே உள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவுடன் சேர்ந்து, இந்திாவிடம் 2 விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளன. இது போதாது என்றும், 3வதாக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் வேண்டும் என்றும், அது உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கட்டப்பட வேண்டும் என்றும் கடற்படை கூறி வருகிறது.

அதன்படி, உள்நாட்டில் தயாரிக்கப்பட உள்ள 2வது விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு, ‘ஐஎன்எஸ் விஷால்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதை கட்டுவதற்கான திட்டம், பல ஆண்டுகளுக்கு முன்பே வகுக்கப்பட்டு விட்டது. இந்த கப்பல் நிச்சயம் தேவை என்பதை, கடந்தாண்டு டிசம்பரில் நடந்த பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், இது தொடர்பான அறிக்கையும் கடந்த மார்ச்சில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டால், ஐஎன்எஸ் விஷாலை கட்டி முடிக்க 10 ஆண்டுகளாகும்.

Related Stories: