×

நாமக்கல் ஆதிதிராவிடர் நலத்துறை ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

நாமக்கல்: நாமக்கல் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில், விஜிலென்ஸ் சோதனை நடந்தது. இதில், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் 10க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இருக்கிறது. இங்கு பணியாற்றும் வார்டன்களிடம், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் மாதந்தோறும் பணம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

மேலும் அரசு விடுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு உணவு மற்றும் அடிப்படை தேவைக்காக ஒதுக்கப்படும் பணத்தை செலவு செய்வதில் வார்டன்கள் பல்வேறு முறைகேடு செய்ய மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு லஞ்சஒழிப்பு பிரிவு போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் ரெய்டு நடத்தினர். அப்போது அங்கு பணியாற்றும் தனி தாசில்தார் மாதேஸ்வரி மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மாலை 6 மணிக்கு துவங்கிய இந்த சோதனை இரவு 11 மணி வரை நீடித்தது.

இதுகுறித்து லஞ்சஒழிப்பு போலீசார் கூறுகையில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை உயர்அதிகாரிகள் வார்டன்களிடம் பணம் கேட்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. மேலும் அத்துறை தொடர்பாக ஏற்கனவே 3 வழக்குகள் லஞ்சஒழிப்பு போலீசாரின் விசாரணையில் இருக்கிறது.

அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துறைக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் பணத்தை முறைகேடாக செலவு செய்யப்படுவது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Tags : Adi Dravidar Welfare Office ,Namakkal , Anti-corruption police raid Namakkal Adi Dravidar Welfare Office: Important documents seized
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...