×

தரிசனத்திற்கு 16 ஆண்டாக காத்திருக்க வைப்பு; பக்தருக்கு ரூ.45 லட்சம் நஷ்டஈடு அளிக்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு: சேலம் நுகர்வோர் கோர்ட் அதிரடி

சேலம்: திருப்பதி திருமலையில் சாமி தரிசனத்திற்கு பணம் கட்டி 16 ஆண்டுகளாக காத்திருந்த சேலம் பக்தருக்கு  தேவஸ்தானம் ரூ.45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சேலம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் ஹரிபாஸ்கர். இவர் 2006 ஜூன் 27ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், மேல்சாத்து வஸ்திரம் என்ற சேவை தரிசனத்திற்கு 2 பேருக்கு ரூ.12,250 கட்டி பதிவு செய்தார். அப்போது 2020 ஜூன் 7ம் தேதி தரிசனம் செய்வதற்கு தேதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக வேறு தேதியில் அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் மேல்சாத்து வஸ்திரசேவை இல்லை என்றும், வேறு பிரேக் தரிசன தேதி தரப்படும் எனவும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் பணம் கட்டி 16 ஆண்டுகள் ஆகியும் தரிசனத்திற்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் திருப்பதி தேவஸ்தானத்தில் சேவை குறைபாடு உள்ளதாக சேலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஹரிபாஸ்கர் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், 1 வருட காலத்தில் மேல்சாத்து வஸ்திரம் சேவையில் மனுதாரருக்கு அனுமதி அளிக்க வேண்டும். இல்லையெனில் சேவை குறைபாடு மற்றும் மனுதாரரின் மன உளைச்சலுக்காக ரூ.45 லட்சம் நஷ்டஈடு தொகை வழங்க வேண்டும். மேலும் 2 மாத காலத்திற்குள் தரிசனத்திற்கு கட்டிய தொகையை 6 சதவீத வட்டியுடன் திருப்பித் தரவேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு நகல் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Tirupati Devasthanam ,Salem Consumer Court , Wait for 16 years for darshan; Salem Consumer Court orders Tirupati Devasthanam to pay Rs 45 lakh compensation to devotee
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை...