கண்காணிப்பு பொறியாளர்கள் தங்கள் அலுவலக காலி பணியிட விவரத்தை உடனே அனுப்ப வேண்டும்: மின்வாரியம் உத்தரவு

சென்னை: கண்காணிப்பு பொறியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகத்தில் நிலவும் காலிப்பணியிடங்கள் குறித்த விவரத்தை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மொத்தமாக பல்வேறு பிரிவுகளின் கீழ் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இருப்பினும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை விரைந்து நிரப்ப வேண்டும் என மின்வாரிய ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் காலிப்பணியிடங்கள் தொடர்ந்து நீடித்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது கண்காணிப்பு பொறியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகத்தில்  நிலவும் காலிப்பணியிடங்கள் குறித்த விவரத்தை உடனடியாக அனுப்பி வைக்க  வேண்டும் என தமிழக மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மின்வாரியத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் களப்பணியாளர்கள் பணியிடமே அதிக அளவில் காலியாக உள்ளது. குறிப்பாக மின்துண்டிப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபடுவோர், மீட்டர் பொருத்துவோர், எழுத்து வேலைகளை மேற்கொள்வோர் பிரிவில் அதிக பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதனால் தற்போது வேலை செய்து வருவோருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. மேலும் மழைக்காலம் தொடங்கி விட்டதால் வரும் காலங்களில் களப்பணியாளர்களின் தேவை அதிகரிக்கும்.

எனவே, இதனை கருத்தில் கொண்டு காலியாகவுள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது மின்சார வாரியம் அனைத்து கண்காணிப்பு பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், தங்களது அலுவலகத்தில் நிலவும் காலிப்பணியிடங்கள் குறித்த விவரத்தை ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி அல்லது அதற்கு முன்பு அனுப்ப வேண்டும். இது காலிப்பணியிடங்கள் தொடர்பான தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு கேட்கப்படுகிறது என கூறியுள்ளது. அதன்படி ஒவ்வொரு கண்காணிப்பு பொறியாளர்களும் தங்களது அலுவலகத்தில் காலியாகவுள்ள பணியிடங்கள் குறித்த விவரத்தை சேகரித்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து வருகிறோம்’ என்றார்.

Related Stories: