சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 2,014 தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் மேன்ஹோல்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நாளை முதல் தொடங்கப்படுகிறது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் பகுதி அலுவலகம்-1 முதல் 15 வரை உள்ள தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர மேன்ஹோல்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நாளை முதல் 15ம் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது.
15 மண்டலங்களில் மொத்தம் உள்ள 2,014 தெருக்களில் 282 தூர்வாரும் இயந்திரங்கள், 161 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 57 கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் என மொத்தம் 500 கழிவுநீர் இயந்திரங்கள் மூலம் பெருமளவில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் மேன்ஹோல்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் அடைப்பு, வழிந்தோடுதல் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகத்திலும் மற்றும் பணிமனை அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
