பைக் பயணத்தில் அஜித்துடன் இணைந்த மஞ்சு வாரியர்

சென்னை: போனி கபூர் தயாரிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’,‘வலிமை’ஆகிய படங்களை தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். தனுஷ் ஜோடியாக ‘அசுரன்’படத்தின் மூலம் தமிழுக்கு வந்த மலையாள முன்னணி நடிகை மஞ்சு வாரியர், தற்போது அஜித் குமாருடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே அஜித் குமார், தனது நண்பர்கள் சிலருடன் பைக்கில் லடாக் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்தப் பயணத்தில் மஞ்சு வாரியரும் இணைந்துள்ளார். இதுதொடர்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அஜித் குமார், தனது பிஎம்டபிள்யூ பைக்கை எடுத்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டார். குறிப்பாக பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்தார்.

பிறகு விசாகப்பட்டினத்தில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றார். பிறகு தன் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலையில் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இமாச்சல பிரதேசத்தில் உள்ள மனாலி, ரோதாங் ஆகிய பகுதிகளில் பைக்கில் பயணித்த அஜித் குமார், தற்போது ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் யூனியன் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்த பைக் பயணத்தில் அஜித் குமாருடன் மஞ்சு வாரியர் இணைந்துள்ளார். இதுதொடர்பான போட்டோக்கள் இமயமலையில் உள்ள கர்டூங்கலா பகுதியில் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அஜித் குமார் ரசிகர்கள் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories: