×

சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம்: பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார்

சென்னை: விநாயகர் சிலை ஊர்வலம் இன்று நடைபெறுவதையொட்டி சென்னையில்  15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதில், 1,352 சிலைகள் பிரம்மாண்ட சிலைகளாகும். அதே போன்று ஆவடி போலீஸ் சரகத்தில் 503 சிலைகளும், தாம்பரம் போலீஸ் சரகத்தில் 699 சிலைகளும் வைக்கப்பட்டன. இந்த நிலையில் பெரிய விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஊர்வலம் இன்று  நடக்கிறது. இதற்காக சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகள் தேர்வாகி உள்ளது.

பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகளை தள்ளி சென்று கடலில் கரைக்கும் வகையில் ‘டிராலி’ வசதி அமைக்கப்பட்டுள்ளது.  காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில், படகில் எடுத்து சென்று சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க , சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் 15 ஆயிரம் போலீசாரும், 2 ஆயிரம் ஊர் காவல்படை வீரர்களும் விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும், அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சு வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட இருக்கின்றனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு வரை நடைபெறுகிறது.

Tags : Ganesha idol procession ,Chennai , Ganesha idol procession in Chennai today: 15 thousand police on security duty
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...