×

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் தினமும் 25 கி.மீ. பாதயாத்திரை:நவீன வசதி கொண்ட கன்டெய்னரில் தங்குகிறார்

சென்னை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாள்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் வரும் 7ம் தேதி முதல் நடைபயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக, ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலமாக 6ம் தேதி இரவு சென்னை வருகிறார். 7ம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை பெரும்புதூரில் உள்ள அவரது தந்தையும், முன்னாள் பாரத பிரதமருமான ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலமாக ராகுல் காந்தி மதியம் 2 மணிக்கு கன்னியாகுமரிக்கு செல்கிறார். அங்கு விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபத்தை ராகுல் காந்தி பார்வையிடுகிறார்.  இதைத் தொடர்ந்து, பாதயாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பின்னர் காமராஜர் மண்டபத்துக்கு செல்லும் ராகுல் காந்தி அந்த பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். இதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதை தொடர்ந்து அங்கிருந்து தனது பாத யாத்திரையை தொடங்குகிறார். குமரி மாவட்டத்தில் மட்டும் 7ம் தேதியில் இருந்து 10ம் தேதி வரை 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார். தினமும் 22 முதல் 25 கிலோ மீட்டர் வரை அவர் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷா மா முகமது சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
 
ராகுல் காந்தி. நடைபயணத்திற்கு இடையே மக்களை சந்திக்கிறார். நடைபயணத்தில் பங்கேற்க கட்சிகள், மக்கள் இயக்கங்கள், அமைப்புகளையும் அழைக்கின்றோம். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கன்டெய்னர் வாகனத்தில் ராகுல்காந்தி தங்குகிறார்.  ராகுல் காந்தி செல்லும் 150 நாட்கள் பாதயாத்திரையிலும் அவருடன் தொடர்ந்து செல்ல உடல் தகுதி பெற்ற 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

Tags : Rahul ,Kanyakumari ,Kashmir , Rahul travels 25 km daily from Kanyakumari to Kashmir. Pilgrimage: Stays in a container with modern facilities
× RELATED ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை.....