உள்ளூரில் இருந்து கொண்டே புறக்கணித்த புடின் அரசு, முழு மரியாதை இன்றி கார்பசேவுக்கு இறுதி சடங்கு; நீண்ட வரிசையில் நின்று மக்கள் அஞ்சலி

மாஸ்கோ: சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிகைல் கார்பசேவின் இறுதிச்சடங்கு, அரசு  முழு மரியாதை இன்றி நேற்று நடந்தது. உள்ளூரில்  இருந்தபோதும்,  அதிபர் புடின் இதை  புறக்கணித்தார். சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிகைல் கார்பசேவ். அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தவர். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர், தனது 91வது வயதில் கடந்த செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்தார். இந்நிலையில், கார்பசேவின் இறுதிச்சடங்கு மாஸ்கோவில் நேற்று நடந்தது.  புகழ் பெற்ற நோவோடெவிசி கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.  

அதற்கு முன்பாக, அவருடைய உடலுக்கு ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், மாஸ்கோவில் இருந்த போதிலும் அதிபர் புடின் இதில் பங்கேற்கவில்லை. கடந்த வியாழக்கிழமையே தனிப்பட்ட முறையில் சென்று அவர் மலரஞ்சலி செலுத்தி விட்டு வந்தார். மேலும், கார்பசேவுக்கு ரஷ்ய அரசின் முழு மரியாதையும் நேற்று அளிக்கப்படவில்லை. இறுதி ஊர்வலத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டுமே அரசு சார்பில் செய்யப்பட்டது. அரசு முழு மரியாதை அளிக்கப்பட்டால், இறுதிச் சடங்குக்கு வெளிநாட்டு தலைவர்களையும், பிரதிநிதிகளையும்  அழைக்க வேண்டியிருக்கும். அதை தவிர்க்கவே,  அரசு மரியாதையை புடின் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories: