ஆவடி அருகே ஜல்லிகள் கொட்டி பல நாட்களாகியும் கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

ஆவடி: ஆவடி மாநகராட்சி 3வது வார்டுக்குட்பட்ட அம்பேத்கர் தெருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த தெரு பல ஆண்டுகள் ஆகியும் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருந்தது. சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சாலை அமைக்க முடிவு செய்தது. இந்நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன் கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்டு சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. அதற்கு பிறகு எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால் இவ்வழியாக நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

முதியவர்களும், சிறுவர்களும் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அவசர தேவைக்குகூட ஆட்டோ வரமுடியாத நிலை உள்ளது. மேலும் இந்த தெருவின் கால்வாய் வசதி இல்லை. அதனால் கழிவுநீர் சாலையிலேயே தேங்குவதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சாலை பணி மற்றும் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: