குன்னூர் அருகே உணவு தேடி ஊருக்குள் புகுந்த சிறுத்தைகள்

ஊட்டி: குன்னூர் அருகே உணவு தேடி சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேரட்டி கிராமம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பேரட்டி கிராமத்தை சுற்றிலும் வனப்பகுதி, தேயிலை தோட்டம் உள்ளது. இப்பகுதியில் அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சிலர் கூறிவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமன் என்பவர் வீட்டில் இரண்டு நாய்களை சிறுத்தை வேட்டையாடி சென்றது. இந்நிலையில், மீண்டும் நேற்று முன்தினம் இரவு இரண்டு சிறுத்தைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வந்தன. சிறிது நேரம் அந்த வீட்டைச் சுற்றிலும் இரு சிறுத்தைகளும் வலம் வந்தன.

வளர்ப்பு பிராணிகள் எதுவும் கிடைக்காத நிலையில் அங்கிருந்து அந்த சிறுத்தைகள் இரண்டும் காட்டிற்குள் சென்றன. குடியிருப்பு பகுதிகளுக்குள் 2 சிறுத்தைகள் நடமாடுவது அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைக் கண்ட ராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், சிசிடிவி கேமரா பதிவினை வனத்துறையினருக்கு காண்பித்து சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தைகள் நடமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: