×

ட்விட்டரில் டிரெண்டாகும் ஒற்றை வார்த்தை பதிவுகள்: 'திராவிடம்'என பதிவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ட்விட்டர் இணையதளத்தில் ஆர்வத்தை தூண்டும் பல்வேறு காணொளிகள், பதிவுகள் அதிகளவில் டிரெண்ட் ஆவது நமக்கு தெரிந்த ஒன்றுதான். ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் டுவிட்டரில் பதிவாகும் ஒற்றை வார்த்தை பதிவு அதிகளவில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை செய்துள்ள வார்த்தை பதிவு டிரெண்ட் ஆகி வருகிறது. முக்கிய நிகழ்வுகள் மீது இணைய பயன்பாட்டாளர்கள் கவனத்தை திருப்பும் விதமாக ஹேஷ்டேக்குகளை உருவாக்கி, அதனை டிரெண்டாக்கும் நடைமுறை டுவிட்டர் பதிவாளர் மத்தியில் பிரபலம்.

ஆனால் ஒரேயொரு வார்த்தையை பதிவிட்டு அதனை டிரெண்டாக்க முடியும் என்பதை தற்போது உலகமே உணர்ந்துள்ளது. அமெரிக்காவில் ரயில்சேவை வழங்கிவரும் Amtrak நிறுவனம் நேற்று அதிகாலை trains என்ற வார்த்தையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஒருவார்த்தை ட்வீட்-க்கு பிள்ளையார் சுழி போட்டது. சில மணி நேரத்திலேயே இந்த ட்வீட்டிற்கு 1.5 லட்சம் லைக்குகள் கிடைத்தது. 25 ஆயிரம் முறை ரீ-ட்வீட்-உம் செய்யப்பட்டது. இதையடுத்து ஒருவார்த்தை ட்வீட் காய்ச்சல் ட்விட்டர் தளத்தை தொற்றி கொண்டது.

தந்து ட்விட்டர் பக்கத்தில் democracy என்ற வார்த்தையை பதிவிட்டு வைரலாக்கினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA பிரபஞ்சம் என பொருள்படும் universe என்ற வார்த்தையை பதிவிட்டிருந்தது. இதையடுத்து உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், நடிகர்- நடிகைகள், முன்னணி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் ஒருவார்த்தை ட்விட்டர் பதிவுகள் அதிவேகமாக பரவி வருகின்றன. ஒற்றை வார்த்தை டிரெண்டிங்கை இந்தியாவில் தொடங்கி வைத்த சச்சின் டெண்டுல்கர், cricket என்று பதிவிட்டிருந்தார்.

இந்த ஒற்றை வார்த்தை பந்தயத்தில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் திராவிடம் என்று பதிவிட்டிருந்தார். பின்னர் தமிழ்நாடு என்ற ஒற்றைவார்த்தையை பதிவிட்டு இந்த டிரெண்ட்டில் தனது பங்களிப்பை அளித்தார் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ். அதிமுக AIADMK பிரிவோ தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் எடப்பாடியார் என்று குறிப்பிட்டு வைரலாக்கியது. நாம்காட்சி தலைவர் சீமான் பதிவிட்டுள்ள தமிழ்த்தேசியம் என்ற பதிவை ஏராளமானோர் ரீ-ட்விட் செய்து வருகின்றனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் சமூகநீதி என்ற வார்த்தையை தனது பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

சர்வதேச ஊடகங்களையும் ஒருவார்த்தை ஜுரம் விட்டுவைக்கவில்லை. Bloomberg நிறுவனம் business என்றும் The Washington Post நியூஸ் என்றும், CNN breaking news என்றும் இடுகை இட்டுள்ளன. ட்விட்டர் பக்கத்தில் 290 வார்த்தைகள் வரை பதிவு செய்துள்ள நிலையில் ஒரேயொரு வார்த்தை பதிவிடப்படும் ட்வீட்கள் சர்வதேச அளவில் தொடர்ந்து டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.     


Tags : Twitter ,Chief Minister ,M.K.Stalin. , Tweet, Trend, Single Word, Dravidian, Chief Minister Stalin
× RELATED ஊழல்வாதிகளை கட்சியில் இணைத்து...