சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன?..கண்டுபிடித்தது யார்?: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளிக்க கோரி ஐகோர்ட் மூத்த வழக்கறிஞர் கடிதம்..!!

சென்னை: சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன? கண்டுபிடித்தது யார்? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் தருமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி விண்ணப்பித்துள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவில் ராணுவம், பொருளாதார வளர்ச்சி அடைவதை போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம் என்று வலியுறுத்தியிருந்தார். ஆன்மீகத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும் என்று குறிப்பிட்ட அவர், ஆன்மிகம் வளர சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சனாதன தர்மம் குறித்து சில கேள்விகளுக்கு விண்ணப்பித்துள்ளார். அதில் சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன? சனாதன தர்மம் கொள்கைகளோ, இலக்கியங்களோ எழுத்துபூர்வமாக உள்ளதா? சனாதன தர்மத்தை கண்டுபிடித்தது யார்? சனாதன தர்மம் திராவிட கலாச்சாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதா? சனாதன தர்மம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகிறதா? கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தினரால் பின்பற்றப்படுகிறதா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

19 கேள்விகளை அனுப்பியுள்ள வழக்கறிஞர் துரைசாமி, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் இதற்கு பதிலளிக்க ஆளுநருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். ரிஷிகளாலும், முனிவர்களாலும், சனாதன தர்மத்தின் ஒளியினாளும் இந்த நாடு உருவாக்கப்பட்டது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார். இந்தியாவை வழிநடத்துவது சனாதன தர்மம் என்று கூறியிருந்தார். ஆளுநரின் சனாதன பேச்சுக்கு அப்போது கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்தியாவை வழிநடத்துவது அரசியல் அமைப்பு சட்டம்தானே தவிர சனாதன தர்மம் அல்ல என்றும் ஆளுநரின் உரை என்பது அரசியலமைப்பு சட்டத்தின் முக உரையை கிழித்தெறிந்துள்ளதாகவும், சமுதாய சீர்குலைப்பு சக்திக்கு வழிகாட்டுவதாக அமைந்திருப்பதாகவும், அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருந்தார்கள்.

Related Stories: