×

யுஎஸ் ஓபன் 3வது சுற்றில் தோல்வி; கண்ணீர் மல்க விடைபெற்ற செரீனா

நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்றுநடந்த 3வது சுற்று போட்டியில் முன்னாள் சாம்பியனான 40 வயதான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 29 வயதான ஆஸ்திரேலியாவின் அஜ்லாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை 5-7 என இழந்த செரீனா, 2வது செட்டில் கடுமையாக போராடினார். டைப்ரேக்கர் வரை சென்ற அந்த செட்டை 7(7)-6(4) என செரீனா கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை 6-1 என எளிதாக அஜ்லா கைப்பற்றினார்.

முடிவில் 5-7, 7-6, 1-6 அஜ்லா வெற்றி பெற்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார். பிரான்சின் 28 வயதான கரோலின் கார்சியா, 6-3, 6-2 என முன்னாள் சாம்பியனான கனடாவின் 22 வயதான பியான்கா ஆண்ட்ரீஸ்குவை வீழ்த்தினார். அமெரிக்காவின் கோகோ காப், 6-2, 6-3 என சகநாட்டைச் சேர்ந்த மேடிசன் கீசையும், அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கே 6-4, 3-6, 6-4 என சீனாவின் வாங் சியூவையும், ரஷ்யாவின் லுட்மில்லா சாம்சோனோ 6-3, 6-3 என செர்பியாவின் அலெக்ஸாண்ட்ராவையும் வீழ்த்தினார். செரீனாவுக்கு இது கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடராகும். தோல்விக்கு பின் அவர் கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார்.

27 வருட டென்னிஸ் வாழ்க்கை நிறைவு?

40 வயதான செரீனா வில்லியம்ஸ் இதுவரை ஆஸி. ஓபனில் 7, பிரெஞ்ச் ஓபனில் 3, விம்பிள்டனில் 7, யுஎஸ் ஓபனில் 6 என 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மகளிர் ஒற்றையரில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மொத்தம் 367 வெற்றிகளை பெற்றுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு அலெக்சிஸ் ஓஹானியன் என்பவரை திருமணம் செய்து கொண்ட செரீனாவுக்கு ஒலிம்பியா என்ற 5 வயது பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் களத்திற்கு திரும்பிய செரீனாவால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இந்நிலையில் தனது 27 வருட டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து அவர் விடை பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பெற்றோர், சகோதரிக்கு நன்றி...
தோல்விக்கு பின் செரீனாவிடம் டென்னிஸ் வாழ்க்கையை தொடர வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நான் அப்படி நினைக்கவில்லை, ஆனால் எதுவும் நடக்கலாம். டென்னிஸ்... என் வாழ்க்கையில் நான் செய்த மிகவும் நம்பமுடியாத பயணம். என்னை வாழ்த்திய ஒவ்வொருவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன். நீங்கள் என்னை பார்க்க இங்கு வந்தீர்கள். இது அனைத்தும் என் பெற்றோரிடமிருந்து தொடங்கியது. அவர்கள் எல்லாவற்றிற்கும் தகுதியானவர்கள். வீனஸ் இல்லாவிட்டால் நான் செரீனாவாக இருக்கமாட்டேன், எனவே நன்றி வீனஸ், என்றார்.

Tags : US Open ,Serena , US Open, Serena
× RELATED அபுதாபி ஓபன் காலிறுதியில் ஆன்ஸ்