×

ஜோலார்பேட்டை அருகே 8 ஏக்கர் பரப்பில் குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீர்-நெல், சப்போட்டா, வாழை சேதம்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் தேங்கி நிற்கும் மழை நீரால் நெல் சப்போட்டா வாழை பயிர்கள் சாதமானதால் விவசாயிகள் கவலைக்குள்ளாகி உள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதல் அடிக்கடி மழை பெய்ததால் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு நிரம்பிய ஏரிகள் தற்போது நிரம்பியுள்ளது. மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இதுவரை நிரம்பாத ஏரிகள் அதிக அளவில் நிரம்பி உள்ளது. இதனால் அனைத்து விவசாய கிணறுகளும் நிரம்பி உள்ளது. மேலும் தொடர்ந்து தற்போது அடிக்கடி கனமழை பெய்து வருவதால் விவசாய நிலங்களிலும் மழை நீர் நிரம்பி விவசாயப் பயிர்கள் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் ஜோலார்பேட்டை, கோடியூர் பகுதியில் உள்ள காசிநாதன், ஆஞ்சநேயன், கண்ணு கவுண்டர், ராஜா ஆகியோருக்கு தல 2 ஏக்கர் வீதம் 8 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் தென்னை, வாழை, நெல், சப்போட்டா உள்ளிட்டவைகள் பயிரிட்டுள்ளனர். மேலும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் இங்குள்ள மேட்டுப்பகுதி நிலத்தில் இருந்து நிரம்பி வரும் மழை நீர் இவர்களின் விவசாய நிலத்தில் வந்து தேங்கி விடுவதால் மழை நீர் செல்ல வழி இன்றி 8 ஏக்கர் பரப்பளவில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

நிலத்தில் உள்ள நெல், சப்போட்டா, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் இங்குள்ள விவசாயிகள் செய்வதறியாமல் கவலைக்குள்ளாகி உள்ளனர். இங்குள்ள நிலங்களில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் குளம் போல் தேங்கி நிற்பதால் அதிக அளவில் கொசு உற்பத்தியாகி நோய் உற்பத்தியாகும் நிலை உருவாகியுள்ளது.

எனவே 8 மாதங்களாக சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே துறை அதிகாரிகள் மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Jolarpet , Jolarpet: Paddy sapota banana crops due to stagnant rain water in an area of about 8 acres near Jolarpet.
× RELATED ஜோலார்பேட்டை தொகுதியில் தள்ளாத...