×

ஜிஎஸ்டி அமலால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை; மின்வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும்: தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!!

திருவனந்தபுரம்: ஜிஎஸ்டி அமலானதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி மாநில முதலமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாநில எல்லை விவகாரங்கள், நதிநீர் பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நிதிசுமை:

ஜிஎஸ்டி அமலானதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்கும் காலத்தை ஒன்றிய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் தமிழ்நாடு முன்னேடி மாநிலமாக உள்ளது. அண்டை மாநிலங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் வழித்தடத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

மின்வாரிய திருத்த மசோதாவை கைவிடுக:

மின்வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். வெள்ள பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. தென்னிந்திய முதலமைச்சர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். நமது மொழிகள் அனைத்தும் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற உணர்வோடு எல்லா பிரச்சனைகளையும் தீர்த்திட வேண்டும். அடுத்த தென்மண்டல கூட்டம் தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.


Tags : Chief Minister ,M.K.Stal ,South ,Zone ,Council , GST, Financial Burden, Electricity Board Amendment Bill, South Zone Council, M.K.Stalin
× RELATED 10-ம் வகுப்பு தேர்வு எழுதும்...