காவிரி ஆற்று வெள்ளத்தால் வீடுகள் பலத்த சேதம் ஒரு மாதமாக முகாம்களிலேயே முடங்கிக் கிடக்கும் கரையோர மக்கள்-மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

பவானி : காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய பெருவெள்ளம் வடிந்தும் கரையோரத்தில் இயல்புநிலை திரும்பாததால், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தற்காலிக முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றனர்.  கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, உபரிநீர் காவிரி ஆற்றில் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த ஜூலை 16ம் தேதி முதல் 3 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அதிகபட்சமாக வினாடிக்கு 2.10 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, உடமைகளுடன் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

காவிரியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பவானி வட்டாரத்தில் காடப்பநல்லூர், குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி நேதாஜி நகர், பவானி நகராட்சி காவேரி நகர், கந்தன் நகர், பசவேஸ்வரர் வீதி, கீரைக்கார வீதி, பழைய பாலம் பாலக்கரை, பழைய பஸ் நிலையம் குப்பம் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளைவிட்டு உடைமைகளுடன் வெளியேறி பல்வேறு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த 7 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. மேலும்,  திமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. 3 முறை பெருக்கெடுத்த வெள்ளம் நீடித்ததில் சுமார் 30 நாட்களுக்கு மேலாக வெள்ள நீர் வீடுகளுக்குள் தேங்கி நின்றதால், சுவர்கள் நனைந்தும், தரைப்பகுதி சேதம் அடைந்தும், வீடுகள் வலுவிழந்தும் காணப்படுகின்றன.

 பல்வேறு இடங்களில் வீடுகளின் மேற்கூரைகள் விழுந்தும், சுவர்கள் பக்கவாட்டில் சாய்ந்தும் உள்ளது. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் கழிவுகளையும் கொண்டு வந்து வீடுகளுக்குள் குவித்துச் சென்றதால், அதனை அப்புறப்படுத்தி, கழுவி சுத்தப்படுத்தினாலும் துர்நாற்றம் வீசி வருகிறது.மேலும், வீடுகளை முழுமையாக சுத்தப்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பவானி பசுவேஸ்வரர் வீதி, மீனவர் தெரு, பழைய பாலம் குப்பம், பாலக்கரை பகுதிகளில் ஏற்கனவே வலுவிழந்த வீடுகள் வெள்ளத்தில் மேலும் சேதமடைந்து, தற்போது குடியிருக்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கு வசித்தவர்கள் மீண்டும் வீடுகளை பழுது பார்த்து, உடனடியாக குடியேற முடியாத நிலை காணப்படுகிறது.

மேலும், கர்நாடக மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் மழைப்பொழிவு ஏற்பட்டால், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கூறப்படுகிறது.

இதனால், முகாம்களில் தஞ்சம் அடைந்த கரையோரப் பகுதி மக்கள் வீடுகளை விட்டு உடமைகளுடன் முகாம்களுக்குச் செல்வதும், வெள்ளம் வடிந்த பின்னர் மீண்டும் உடமைகளுடன் வீடுகளுக்குத் திரும்பி வருவதுமாக இருந்து வருகின்றனர். அடுத்தடுத்து 30 நாட்களுக்கு மேலாக முகாம்களிலேயே தங்கி இருந்த இவர்கள் தற்போது மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நீடிப்பதால் வீடுகளுக்கு திரும்ப தயக்கம் காட்டி வருகின்றனர்.

சன்னியாசிபட்டியில் தண்ணீர் வடிந்தது

பவானி அடுத்த சன்னியாசிபட்டியில் 15க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் காவிரி வெள்ளம் கரையோரத்தில் விளைநிலங்களையும், விவசாயத் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளையும் சூழ்ந்தது. தனித்தனி தீவுகளாக தோட்டத்து வீடுகள் காட்சியளித்த நிலையில் இவர்கள் பிற பகுதிகளுக்கு பரிசல் மூலம் சென்று வந்தனர். இக்கிராமத்துக்குச் செல்லும் ரோட்டில் காவிரி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் டவுன் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது வெள்ளம் வடிந்ததால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பவானி - குமாரபாளையம் காவிரி ஆற்றின் பழைய பாலத்திலும் நிறுத்தப்பட்டிருந்த வாகனப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.

பவானி நகராட்சி மயானம் திறப்பு

காவிரி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் கரையோரத்தில் உள்ள பவானி நகராட்சி மயானத்துக்குள் புகுந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மயானம் பூட்டப்பட்டது. இதனால், அருகாமையில் உள்ள மயானங்களுக்கு சடலங்களை எரியூட்ட கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்போது வெள்ளம் வடிந்ததால், மயான வளாகம் சுத்தம் செய்யப்பட்டு, நேற்று மாலை முதல் எரிவாயு தகனமேடையில் சடலங்கள் எரியூட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.

Related Stories: