×

கப்பலோட்டிய தமிழன் வ. உ.சியின் 151-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாளினை முன்னிட்டு சென்னை, இராஜாஜி சாலையில் உள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு வரும் திங்களன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் செப்டம்பர் 5ம் தேதி காலை 9.30 மணியளவில், சென்னை, இராஜாஜி சாலை, துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

செக்கிழுத்த தியாகச் செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாதன் பிள்ளை - பரமாயி அம்மையார் தம்பதியருக்கு 1872ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி மகனாகப் பிறந்தார். அடிப்படைக் கல்வியை ஒட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்விப் படிப்பை தூத்துக்குடியிலும், சட்டக் கல்வியை திருச்சியிலும் பயின்று 1894ம் ஆண்டு வழக்கறிஞர் ஆனார். மேலும், சமூக சேவையிலும், அரசியல் பணியிலும் படிப்படியாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் வ.உ.சி. தாய் நாட்டின் விடுதலைக்காகத் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவர் வ.உ.சிதம்பரனார்.

அரசியல் வாழ்க்கையில் பாலகங்காதர திலகரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை, அடியோடு ஒழித்திட, அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்றார். வ.உ.சிதம்பரனாரின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள், அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர் மீது வழக்கு பதிவு செய்து, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக 1908ம் ஆண்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு, செக்கிழுக்க வைக்கப்பட்டார்.  

தமிழக மக்களால் பெரிதும் போற்றப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், தாய்மொழி, தமிழ்மொழி மீது கொண்டிருந்த தணியாத தாகத்தின் காரணமாக பல அரிய நூல்களையும், சுயசரிதையையும் கவிதை வடிவில் எழுதியுள்ளார். தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர். 1972ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற வ.உ.சிதம்பரனாரின் நூற்றாண்டு விழாவில்,  பாரத பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அம்மையார் அவர்களால், அன்னாரின் சிலை திறந்து வைக்கப்பட்டது.  அந்நூற்றாண்டு விழாவிலே வ.உ.சி அவர்களின் திருவுருவம் பதித்த அஞ்சல் தலைகளை பாரத பிரதமர் இந்திராகாந்தி வெளியிட, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தன்னுடைய திருக்கரங்களால் பெற்றுக் கொண்டார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில். 1975 முதல் 1976 வரை தூத்துக்குடியில் கட்டிமுடிக்கப்பட்ட 4 கப்பல் தளங்களுக்கு செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் பெயர் சூட்டப்பட்டது. 1998ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் எழுதிய 16 நூல்களும் அரசுடைமையாக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது முதல் சுதந்திர தின உரையில், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், அன்னாரின் 150-வது பிறந்த நாள் மிகச்சிறப்பாகத் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும் என அறிவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர், வ.உ.சிதம்பரனார் அவர்களின் புகழுக்கு, மேலும் பெருமை சேர்க்கின்ற முத்தான 14 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். அவற்றில், சென்னையில் அன்னாரின் திருவுருவச் சிலை, தூத்துக்குடி மாநகர முதன்மைச் சாலைக்குத் திருப்பெயர், அன்னார் வாழ்ந்த இல்லம், மணிமண்டபங்களில்  ஒலி- ஒளிக் கண்காட்சி, அன்னார் படித்த பள்ளி மறுநிர்மானம் மற்றும் புதிய கலையரங்கம், பல்கலைக் கழகத்தில் ஆய்விருக்கை, நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ள அன்னாரின் அனைத்து நூல்களும் குறைந்த விலையில் மறுபதிப்பு, கப்பல் கட்டுமானத்துறையில் பங்காற்றிவரும் சிறந்த தமிழருக்கு அன்னாரின் பெயரிலான ரொக்கப் பரிசுடன் கூடிய விருது, அன்னாரின் மறைந்த நாள் தியாகத்திருநாளாக அறிவிப்பு, வ.உ.சி தொடர்பான நூல்கள் மின்னுருவாக்கம் உள்ளிட்ட முத்தான அறிவிப்புகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நம் தேசத்தின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்தும், அயராது பாடுபட்டும், தாய் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து, மறைந்தும் மக்களின் மனங்களில் என்றும் நிறைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.  

மேலும், வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு சென்னை, கலைவாணர் அரங்கில் “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி காலை 10.00 மணிக்கும்,செப்டம்பர் 6ம் தேதி காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2.00 மணிக்கும் என இரண்டு காட்சிகளாக நவீன முறையில் திரையிடப்படவுள்ளது. அனுமதி இலவசம். அனைவரும் கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,M.K.Stalin ,U.C , W. 151st Birth Anniversary of U.C. Statue of Prime Minister M.K.Stalin
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து