உரிய விலை கிடைக்காததால் விரக்தி!: ஓசூர் அருகே 700 மூட்டை சின்ன வெங்காயத்தை மழைநீரில் கொட்டி அழித்த பட்டதாரி விவசாயி..!!

கிருஷ்ணகிரி: ஓசூர் பகுதியில் போதிய விலை கிடைக்காததால் 700 மூட்டை சின்ன வெங்காயத்தை பட்டதாரி விவசாயி இருவர் தனது நிலையில் தேங்கிய மழைநீரில் கொட்டி அழித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் ஓசூர் அருகே சானமாவு கிராமத்தை சேர்ந்த விவசாயி அணில் குமார், பி.கா. பட்டதாரி. இவர் 5 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்திருந்தார். அறுவடை நேரத்தில் கனமழை பெய்ததால் வியாபாரிகள் வெங்காயத்தை வாங்கி செல்ல முன்வரவில்லை.

இதனால் அவருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இதன்காரணமாக 700 மூட்டை சின்ன வெங்காயத்தை நேற்று டிராக்டரில் ஏற்றிச் சென்று அவருடைய நிலத்தில் உள்ள குட்டையில் நீரிலேயே கொட்டி அழித்தார். இதுகுறித்து கூறிய விவசாயிகள், பொதுவாக 50 கிலோ சின்ன வெங்காயம் கொண்ட ஒரு மூட்டை 5 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானதாகவும், ஆனால் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் இன்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு மூட்டை வெறும் 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை மட்டுமே விற்பனையானதாகவும் தெரிவித்தனர். மேலும் வெங்காயத்தை வாங்கிச் செல்ல வியாபாரிகள் முன்வரவில்லை என்றும் விவசாயிகள் கவலையுடன் கூறினர்.

Related Stories: