×

இலங்கையில் இருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் நாடு திரும்பினார்..!!

கொழும்பு: இலங்கையில் இருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் நாடு திரும்பினார். இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அனைவரும் பதவி விலக நேர்ந்தது. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் கடந்த ஜூலை மாதம் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததால் கடந்த ஜூலை 13ல் இலங்கையை விட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியேறினார்.  

விமானப்படை விமானம் மூலம் மாலத்தீவில் முதலில் தஞ்சமடைந்த கோத்தபய, அங்கிருந்து சிங்கப்பூர் சென்று தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.  பிறகு, தாய்லாந்து சென்ற அவருக்கு 90 நாட்கள் விசா வழங்கப்பட்டு ஓட்டலில் கடும் கட்டுப்பாடுகளுடன் தங்கி இருந்தார். இதனிடையே கோத்தபய இன்று இலங்கை திரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொது செயலாளர் சாகர கரியவசம் தெரிவித்தார். அவர் ஏற்கனவே கொழும்புவில் வசித்து வந்த வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

அமெரிக்க குடியுரிமை பெற கோத்தபய முயன்று வருவதாக தகவல் வந்த நிலையில் 2 மாதத்துக்கு பிறகு அவர் நாடு திரும்பியுள்ளார். அவர் விமானத்தில் இருந்து கீழே இறங்கியவுடன் அவரின் கட்சி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். 52 நாள்களுக்கு பிறகு நாடு திரும்பிய ராஜபக்சே அரசின் பாதுகாப்போடு தங்க இருக்கிறார்.  கொழும்பு நகரில் உள்ள அரசு மாளிகையில் தங்கியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு வசதிகளும் தரப்பட்டுள்ளன.


Tags : President ,Gotabaya Rajapakse ,Sri Lanka , Sri Lanka, Former President Gotabaya Rajapakse, Country
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...