புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க அடையாறு ஆற்றை அகலப்படுத்த நடவடிக்கை; ஆலோசனை கூட்டத்தில் முடிவு

தாம்பரம்: புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க, அடையாறு ஆற்றின் அகலத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது  என அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் மழைக் காலங்களில் சென்னை புறநகர் பகுதிகளான முடிச்சூர், வரதராஜபுரம், இரும்புலியூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மேற்கண்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விரைந்து செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பின்னர் டி.ஆர்.பாலு எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது: தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம், அஷ்டலட்சுமி நகர், டி.டி.கே நகர், இரும்புலியூர், அருள் நகர், கிருஷ்ணா நகர், சி.டி.ஓ காலனி, செம்பாக்கம், திருமலை நகர், மாடம்பாக்கம் உட்பட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் கடந்த மழைகாலங்களில் பல நாட்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. ஒவ்வொரு மழைக்காலத்திலும் அங்குள்ள மக்கள் பல நாட்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மட்டும் 3, 4 முறை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்த்துவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், அடுத்த மழை காலத்தில் இந்த பாதிப்பு இருக்ககூடாது என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அதன்படி உடனடியாக திட்டங்கள் தீட்டப்பட்டு வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் 70 சதவீத பணிகள் தான் நிறைவடைந்துள்ளது. 30 சதவீத பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. தொடர் மழை காலத்தில், 15 ஆயிரம் கன அடி நீர் ஒரு நொடியில் வருகிறது. தற்போது நீர்வழி பாதையில் 11 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறும் நிலை உள்ளது. எனவே, கூடுதலாக 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. ஒரத்தூர், ஆதனூர், நந்திவரம், சோமங்கலம், மணிமங்கலம் ஆகிய பகுதிகளின் வெள்ளநீர் அடையாறு ஆற்றை நோக்கியே வருகிறது.

அப்படி வரும்போது முடிச்சூர், வரதராஜபுரம், கிருஷ்ணாநகர் ஆகிய பகுதிகளில் வெளியற வழியில்லாமல் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த வழிகளை உடனடியாக செயல்படுத்துவதற்கு அடையாற்றின் வலது பகுதியை 20 மீட்டர் அகலப்படுத்த வேண்டும். அந்த  முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்,  வருவாய்துறையினர் ஆவன செய்யவேண்டும். இந்த நடவடிக்கைகள் விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரிடமும் கேட்டுள்ளோம். அகலப்படுத்துவதற்கு தேவையான 20 மீட்டர்  நிலத்தை மீட்பது, அதற்கு மாற்று இடம் தருவது ஆகியவைதான் இப்போது நடைபெற்று  வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், தாம்பரம் மாநகராட்சி செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: