ரூ.32.49 கோடியில் நடந்து வரும் அண்ணா நூற்றாண்டு நூலக சீரமைப்பு பணி வரும் 30ம் தேதிக்குள் நிறைவடையும்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக சீரமைப்பு பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, துறை செயலாளர் மணிவாசன், முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத், பள்ளிக்கல்வித்துறை  இணை இயக்குனர் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர், அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சீரமைக்க ரூ.32 கோடியே 49 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்தார். அதில் சிவில் பணிக்காக ரூ.18.26 கோடியும், மின் பணிக்காக ரூ.14.23 கோடியும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த மாதம் 30ம் தேதிக்குள் சீரமைப்பு பணியை முடிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நூலகம் 8 தளங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு தளங்களாக பார்த்து எங்கெல்லாம் பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது, எங்கெல்லாம் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்  என்று விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

தற்போது, புதிதாக 30,160 சதுர அடி அளவிற்கு தரைவிரிப்பு அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக  அதிக மின்சக்தி கொண்ட ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் ஓலைச்சுவடிக்கென 7வது தளம் அமைந்துள்ளது. மணிமேகலை, குண்டலகேசி உள்ளிட்ட ஐம்பெரும் காப்பியங்கள் ஓலைச்சுவடிகளாக உள்ளன.  அதில் உள்ள ஓலைச்சுவடிகளை தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  பாதுகாத்திடவும், மக்கள் பார்வைக்கு சென்றடையவும் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் கலைஞர் நூலக கட்டுமானப்  பணிகள் தற்போது 90%  நிறைவடைந்துள்ளது. 3 மாதங்களில் பணிகள் முழுவதும் முடிவடையும். மறைந்த முதல்வர்  கலைஞரின் நினைவிடத்தில் பதிக்கப்படும் கற்கள் சிறப்பாக  இருக்க வேண்டும் என்பதற்காக ஜோத்பூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட வட மாநிலங்களில்  இருந்து கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: