மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் காசநோய் தடுப்பு மருத்துவ முகாம்

கூடுவாஞ்சேரி: மாடம்பாக்கம் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ், காசநோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சியில், மாடம்பாக்கம், குத்தினூர், தாய் மூகாம்பிகை நகர், வள்ளலார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் காசநோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் மாடம்பாக்கத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் அருகில் நேற்று நடந்தது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கி காசநோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

இதில், 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல், சளி, தலைவலி, மூச்சுத்திணறல், எடை குறைதல், மாலைநேர காய்ச்சல், சளியில் ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் உள்ள 35க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், தமிழக அரசின் நடமாடும் மருத்துவ குழு வாகனத்தில் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரேவும் எடுக்கப்பட்டது. எழுச்சூர் வட்டார நடமாடும் மருத்துவ குழு டாக்டர்கள், காசநோய் அறிகுறிகள் அதனை  தடுக்கும் வழிமுறைகள் மற்றும் அரசு வழங்கும்  உதவித்தொகைகள் குறித்து விரிவாக எடுத்து கூறினர்.

Related Stories: