×

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் தலையிட்டு ரூ.6 கோடி பொது சொத்துகளை மீட்க வேண்டும்; குடியிருப்போர் நலவாழ்வு சங்கம் மனு

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இதில் நகராட்சியில் உள்ள ரூ.6 கோடி மதிப்புள்ள பொது சொத்துக்களை மீட்கக் கோரி கடந்த 8 ஆண்டுகளாக மனு கொடுத்தும் பயனில்லை. எனவே, நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி டிபன்ஸ் காலனி குடியிருப்போர் நலவாழ்வு சங்கத்தினர் நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி மற்றும் நகராட்சி ஆணையர்  இளம்பரிதி ஆகியோரிடம் நேற்று புகார் மனு கொடுத்தனர்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ‘எங்கள் நலவாழ்வு சங்கத்திற்கு உட்பட்ட டிபன்ஸ் காலனி பகுதியில் சிவிலியன் கோ-ஆப்ரேடிவ் சொசைட்டி மூலம் கடந்த 1885ம் ஆண்டு 16.96 ஏக்கர் நிலத்தில் லே-அவுட், குளம் மற்றும் பொது இடம் ஆகியவற்றை பொது பயன்பாட்டிற்கென ஒதுக்கப்பட்டது. அவற்றின் தற்கால மதிப்பு சுமார் ரூ.6 கோடி ஆகும். இதில், மேற்கண்ட சொசைட்டியின் செயல்பாடுகள் முடிந்து விட்ட காரணத்தால் சொசைட்டி கலைக்கப்பட்டது. இதில் கடந்த 2005ம் ஆண்டு கலைக்கப்பட்ட சொசைட்டியின் முகவரியில் போலியாக ஒரு நபர் சொசைட்டி தனி அலுவலர் என்ற போர்வையில் பொது நலத்திற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை தனிநபருக்கு போலி ஆவணம் மூலம், கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் 2005ம் ஆண்டு பதிவு செய்துள்ளனர்.

அவற்றை பல மனைகளாக பிரித்து விற்பனையும் செய்து உள்ளனர். இதில், போலியாக பதிவு செய்த ஆவணங்களை கொண்டு வருவாய்த்துறையினர் பட்டாவும் வழங்கியுள்ளனர். வீடு கட்டுவதற்கு நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியாக இருந்தபோது நிர்வாகத்தின் மூலம் கட்டிட வரைபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எங்கள் நலவாழ்வு சங்கம் பேரூராட்சியிடம் முறையிட்டும் பயனில்லை. இதுகுறித்து பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட மேற்கூறிய அனைத்து இடங்களையும் மீட்டு தரக்கோரி முதலில் மாவட்ட கலெக்டருக்கு  கோரிக்கை மனு அளித்தோம். அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு போலியாக ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்தவர்கள் மீது விசாரணை நடைபெற்று முடிவுற்ற நிலையில், தவறுதலாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யாமல் காலத்தை கடத்துகின்றனர். இந்நிலையில், அனைத்து தகவல்களையும் சேகரித்து முறையாக மனு செய்து வண்டலூர் வட்டாட்சியரின் பரிந்துரையின் பெயரில் பட்டா ரத்து செய்ய உத்தரவிடப்பட்டு மேல் நடவடிக்கைக்காக தாம்பரம் கோட்டாட்சியரிடம் நிலுவையில் உள்ளது.

ஆனால், நகராட்சி நிர்வாகமோ எங்களுக்கு முறையாக தானம் வழங்கப்படவில்லை என நிலத்தை கையகப்படுத்த தயங்குகின்றனர். இதில், மனை பிரிவில் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தானம் வழங்கவில்லை என்றாலும், உள்ளாட்சி நிர்வாகம் கையகப்படுத்தி கொள்ளலாம் என உயர் நீதிமன்ற ஆணையே உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் போலி ஆவணம் மூலம் கிரையம் பெற்றுள்ளனர். எனவே இது குறித்து பரிசீலனை செய்து கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள எங்களது நலவாழ்வு சங்க கோரிக்கைகளை உடனடியாக நடவடிக்கை எடுத்து பொது இடங்களை கையகப்படுத்தி அறிவிப்பு பலகை வைக்கும்படியும், வருவாய் கோட்டாட்சியரிடம் பரிந்துரைத்து பட்டா ரத்து செய்து நகராட்சி நிர்வாகத்தின் பெயரில் பட்டா மாற்றம் செய்திடவும் டிபன்ஸ் காலனி குடியிருப்போர் நலவாழ்வு சங்கத்தினர் கொடுத்த அந்த  மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Nandivaram-Kudovanchery ,administration ,Residents Welfare Association , Nandivaram-Kudovanchery Municipal Administration should intervene and recover Rs.6 crore of public property; Residents Welfare Association petition
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...