×

பட்டா வழங்க தடையாக இருக்கும் தனியார் நிறுவனத்தை கண்டித்து குடியிருப்போர் நல சங்கம் உண்ணாவிரத போராட்டம்; கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு

கூடுவாஞ்சேரி: ஆதனூர் ஊராட்சியில்  தடையை மீறி இலவச வீட்டுமனை பட்டா வழங்க தடையாக இருக்கும் தனியார் நிறுவனத்தை கண்டித்து குடியிருப்போர் நல சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சியில், ஆதனூர், டிடிசி நகர், ஏவிஎம் நகர், கபாலி நகர், எம்ஜி நகர், கொருக்கந்தாங்கல், லட்சுமிபுரம் உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இவர்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் குடியிருக்கும் பகுதியில் அசோக் லைலாண்ட் நிறுவனத்திற்கு அரசு நிலம் ஒதுக்கிக் கொடுத்தது. இதனையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள வீடுகளை வருவாய்த்துறையினர் இடிக்க வந்தனர். அப்போது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதை அடுத்து வீடுகளை இடிப்பதை கைவிட்டு வருவாய்த்துறையினர் சென்றனர்.

பின்னர், இதுகுறித்து அசோக் லைலேண்ட் நிறுவனத்தினர் மற்றும் அப்பகுதி குடியிருப்போர் நல சங்கத்தினர் மாறி மாறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள் அசோக் லைலேண்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக கடந்த மாதம் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து லட்சுமிபுரம் குடியிருப்போர் நல சங்கத்தின் துணை தலைவர் வெங்கடேசன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் எந்த ஒரு பணியையும் மேற்கொள்ள கூடாது என்று இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தனர். ஆனால், உத்தரவை மீறி வருவாய்த்துறையினர் அப்பகுதி சென்று கடந்த வாரம் நில அளவீடு செய்வதற்காக வந்தனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அதிகாரிகள் திரும்பி சென்றுவிட்டனர். இதில், மாவட்ட கலெக்டர் தலையிட்டு லட்சுமிபுரம் பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அசோக் லைலேண்ட் நிறுவனத்தை கண்டித்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவதற்கு மணிமங்கலம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.  நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது போலீசார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். ஆனால்,  தடையை மீறி குடியிருப்போர் நல சங்கத்தின் துணை தலைவர் வெங்கடேசன் தலைமையில் லட்சுமிபுரம் பகுதியில் நேற்று காலை 9 மணி அளவில்  பள்ளி மாணவர்கள் உட்பட குடும்பத்துடன் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழமுதன், ஒன்றிய கவுன்சிலர் மலர்விழிதமிழமுதன், ஆர்டிஓ சைலேந்திரன், தாம்பரம் உதவி கமிஷனர் ரவி, மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘அசோக் லைலேண்ட் நிறுவனத்திற்கு தமிழக அரசு இடம் ஒதுக்கி கொடுப்பதற்கு முன்பே நாங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வீடு கட்டி குடியிருந்து வருகின்றோம். இந்நிலையில், வருவாய் துறையினர் கொடுத்த பொய்யான அறிக்கையை நம்பி நீதிமன்றம் அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. எனவே, இதுகுறித்து அட்வகேட் கமிஷன் எங்கள் பகுதிகளில் நேரில் வந்து ஆய்வு செய்து எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் எங்களது போராட்டம் தொடரும்’என்றனர்.  இது சம்பந்தமாக ஆர்டிஓ சைலேந்திரன் கூறுகையில், ‘இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நேரில் சென்று முதலில் மனு கொடுங்கள். பின்னர், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கிறோம் என வாக்குறுதி கொடுத்தார். இதனை ஏற்று அனைவரும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், ஆதனூர் ஊராட்சியில் இன்று காலையில் 3 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Residents' Welfare Association ,Bustle ,Kuduvancheri , Residents' Welfare Association went on a hunger strike to condemn the private company that is blocking the grant of leases; Bustle near Kuduvancheri
× RELATED நிவாரணம் வழங்க வலியுறுத்தி தொழிலாளி சடலத்தை சாலையில் வைத்து மறியல்