×

திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளத்தின் நீர்வரத்து கால்வாய்கள்; ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

திருக்கழுக்குன்றம்:  திருக்கழுக்குன்றத்தில் சங்கு தீர்த்த குளத்தில் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. இதனை, உடனடியாக அகற்றி சீர் செய்ய வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை  வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் புகழ் பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. இங்கு, இந்தியாவில் உள்ள சிவத்தலங்களில் முக்கியத்தலமாக விளங்கி வருகிறது. இந்த மலைக்கோயிலுக்கு சற்று அருகாமையில் 12 ஏக்கர் பரப்பளவில் சங்கு தீர்த்த குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால், முன்பொரு காலத்தில் மார்க்கண்டேய முனிவர் சிவத்தலங்களுக்கெல்லாம் சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்வார். அப்படி, சிவனை பற்றி பாடி வழிபட்டு வந்த காலத்தில் திருக்கழுக்குன்றத்தில் மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரரை வழிபட வந்தபோது, அங்குள்ள குளத்தில் குளித்துள்ளார். பின்னர், அந்த குளத்து நீரை  மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய எடுத்து செல்ல  பாத்திரமில்லாததால் சிவபெருமானை மனமுருகி வேண்டினார். அப்போது, மார்க்கண்டேய முனிவருக்காக அந்த குளத்திலிருந்து ஒரு சங்கு பிறந்தது. அதைக் கண்ட மார்க்கண்டேய முனிவர் மனமகிழ்ந்து அந்த சங்கின் மூலம் நீரை கொண்டு மலை மீதுள்ள வேதகிரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து மகிழ்ந்தார். மார்க்கண்டேய முனிவரின் தவத்தால்  இந்த குளத்தில் சங்கு  தோன்றியதால் இது ‘சங்கு தீர்த்த குளம்’என்று பெயர் பெற்றது. அப்போதிலிருந்து, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த, குளத்தில் சங்கு பிறந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.         

இந்த, சங்கு தீர்த்த குளத்தில் குளித்தால் மனநோய், தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தீரும் என்பது ஐதீகம். எனவே, தமிழ்நாடு மட்டுமல்லாது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் உலகின் பல நாடுகளிலிருந்தும் வருகின்ற பக்தர்கள் இந்த சங்கு தீர்த்த குளத்தில் நீராடி விட்டு அந்த நீரை பாட்டில்களிலும் மற்றும் பாத்திரங்களிலும் கொண்டு சென்று தங்களது சொந்த ஊர்களில் உள்ள அக்கம், பக்கத்தார் மற்றும் உறவினர்களுக்கு தீர்த்தமாக கொண்டு சென்று கொடுப்பார்கள் என்பது ஒரு புறமிருக்க 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறப்பது மட்டுமின்றி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பகோணம் கும்ப மேளா போல் இந்த திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘புஷ்கர மேளா’ என்ற லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் விழாவும் நடைபெற்று வருகிறது. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த சங்கு தீர்த்த குளத்தின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகி பக்தர்களை வேதனைக்கு ஆளாக்குகிறது. இதற்கு காரணம், இந்த குளத்திற்கு வருகின்ற நீர்வரத்து கால்வாய்கள் ஆங்காங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நீர் வரத்துக்கு வழியின்றி, கடும் மழைக்காலங்களில் கூட நீர் நிரம்ப வழியில்லாத நிலை உள்ளது. நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து சிலர் வீடுகளாகவும், சிலர் திருமண மண்டபங்களாகவும் கட்டியுள்ளதால், நீர்வரத்துக்கு வழியின்றி தவிக்கிறது. இந்த புகழ் பெற்ற சங்கு தீர்த்த குளம்.

எனவே, மழைக்காலம் வருவதால் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து சங்கு தீர்த்த குளத்திற்கான கால்வாய்க்கான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வரத்தை முறைபடுத்த வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பக்தர்கள் கூறுகையில், ‘மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரரும் மற்றும் உலக புகழ் பெற்ற சங்கு தீர்த்த குளமும் தான் இந்த ஊருக்கும் இந்த மாவட்டத்திற்கும் பெருமை.  அப்படி, இருக்கும்போது இந்த சங்கு தீர்த்த குளத்தின் நீர் வரத்து கால்வாயின் ஆக்கிரமிப்புகள் அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும் காணாததுப்போல் இருக்கிறார்கள். முன்பெல்லாம், சாதாரண மழைக்கே வழிந்தோடி நிரம்பி நிற்கும் சங்கு தீர்த்த குளம், இப்போதெல்லாம் நீர் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புக்கு பின், ஊரே மூழ்கும் அளவுக்கு மழை பெய்தாலும் சங்கு தீர்த்த குளம் மட்டும் பாதியளவு தான் நிரம்புகிறது.
எனவே, இனியாவது மட்டுமல்ல இந்த மழைக்காலத்திலாவது இந்த புகழ் பெற்ற சங்கு தீர்த்த குளம் முழுதும் நிரம்பும் வகையாக குளத்திற்கான நீர் வரத்து கால்வாயை பாராபட்சமின்றி, யாருக்கும் கூழை கும்பிடு போடாமல் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயின்  ஆக்கிரமிப்புகளை அகற்றி சங்கு தீர்த்தக் குளத்திற்கான நீர் வரத்தை உறுதிப்படுத்திட வேண்டும்’ என்றனர்.


Tags : Thirukkalukkunram Sangu Thirtha Pond , The drainage canals of Thirukkalukkunram Sangu Thirtha Pond; Public demand immediate removal of encroachment
× RELATED மின் கம்பி அறுந்து 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்