திருவள்ளூர் நகரில் ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு அலுவலகங்கள்; அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில் வட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம் மற்றம் வட்ட வழங்கல் அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன. இதனால் பொதுமக்கள் குழப்பமடைகின்றனர். மேலும் அங்கு வருபவர்களுக்கு கழிவறை மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் கடும் அவதியடைகின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், இ-சேவை மையம், வட்ட வழங்கல் அலவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. திருவள்ளூர் வட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், பட்டா, நில அளவை செய்வது, ஜாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ் உள்ளி பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்காக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகம் வந்து செல்கின்றனர். அது மட்டுமல்லாமல் திருவள்ளூர் வட்டத்திற்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் வந்து செல்கின்றனர்.

இதேபோல் திருவள்ளூர் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு, புதிய குடும்ப அட்டை பெறுவதற்காகவும், குடும்ப அட்டையில் பெயர் நீக்கவும், சேர்க்கவும், இடமாற்றம் பதிவு செய்யவும் ஆண்கள், பெண்கள் என நாள் தோறும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். அதேநேரத்தில் திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகமும் இந்த வளாகத்திற்குள்ளேயே செயல்படுவதால் வீட்டு மனை வாங்கியவர்கள், அதனை விற்பனை செய்தவர்கள், சாட்சி கையெழுத்து இடுபவர்கள் என இங்கும் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோரும், திருமணப் பதிவு செய்பவர்கள்,  வங்கி கடன் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்காக வங்கி ஊழியர்கள் மற்றும் பயனாளிகளும் இந்த சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். திருவள்ளூர் கிளைச் சிறைக்கும் இந்த வளாகத்தின் வழியாகத் தான் கைதிகளை கொண்டு செல்வதும், கைதிகளை பார்க்க வரும் உறவினர்களும் அந்த வளாகம் வழியாகத் தான் வந்துசெல்கின்றனர்.

இப்படி நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் வந்து செல்லும் இந்த வளாகத்திற்குள் அத்தியாவசியத் தேவையான குடிநீர் வசதியோ, கழிவறை வசதியோ இல்லாதது பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சான்றிதழ்கள் பெற வருபவர்கள், பத்திரப் பதிவு செய்ய வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை வரும் போது தங்களது உடல் உபாதையை கழிக்கவோ, அவசரத்திற்கு குடிநீர் அருந்தவோ முடியாத நிலை ஏற்படுகிறது.  இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்து செல்லும் அரசு அலுவலக வளாகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாதது ஒரு வகையில் வருத்தம் அளித்தாலும், அது  பொது மக்களிடையே ஒருவிதமான அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது என்றே சொல்லலாம். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: