×

பூந்தமல்லியில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்; அமைச்சர் நாசர் வழங்கினார்

பூந்தமல்லி: தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ. கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.ராமன், ஆவடி கல்வி மாவட்ட அலுவலர் சி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு 360 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். அப்போது அவர்  பேசியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் 139 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மாவட்டத்தில் 2021-22ம் கல்வியாண்டில் 10,832 மாணவர்களுக்கும், 13080 மாணவிகளுக்கும் என மொத்தம் 29,912 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்கள் சைக்கிள்களுக்கு ரூ.5,60,55,600, பெண்கள் சைக்கிள்களுக்கு ரூ.6,52,95,360 என மொத்தம் ரூ.12 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரத்து 960 அரசு செலவிட்டுள்ளது.
தமிழகத்தில் பெண்கள், மாணவிகள் முன்னேற்றத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.

நாட்டின் வருங்காலத் தூண்களான மாணவிகள் சுயமரியாதையுடனும், வீரத்துடனும், ஆற்றலுடனும் சிறப்பாக வாழவும், சாதனைகள் படைக்கவும் பள்ளியில் பயிற்சி பெற்று  தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் கமலேஷ், நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை, மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், பள்ளித் தாளாளர் நடராஜன்,  தலைமையாசிரியை கோ.ரமணாபாய் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags : Poontamalli ,Minister ,Nasser , Free bicycles for school girls in Poontamalli; Presented by Minister Nasser
× RELATED பூந்தமல்லியில்...