×

கோவில்பட்டி அருகே பரபரப்பு போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த பள்ளி ஆசிரியை அதிரடி டிஸ்மிஸ்: செலக்‌ஷன் கிரேடுக்காக ஆய்வு செய்த போது அம்பலம்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியை தலைமறைவானார். அவரை டிஸ்மிஸ் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாத்தி (45). தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, சின்னதாராபுரத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 1994-96ம் ஆண்டில் ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்துள்ளார். அப்போது ஆங்கில பாடத்தில் ராஜாத்தி 37 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அதை 77 என திருத்தி வாங்கி, பட்டயச் சான்றிதழும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் 2002ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி விருதுநகர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெற்று, அதே மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பணி செய்து வந்தார். பின்னர் விளாத்திகுளம், புதூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பணியிட மாறுதல் பெற்று பணியாற்றினார். அங்கிருந்து கடந்த மார்ச் மாதம் பணியிட மாறுதல் பெற்று, தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இதற்கிடையே செலக்‌ஷன் கிரேடு தகுதிக்காக, ராஜாத்தியின் சான்றிதழ், அரசுத் தேர்வுகள் துறை இயக்ககத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு தேர்வுகள் துறை உதவி இயக்குநர், இடைநிலை ஆசிரியை ராஜாத்தியின் சான்றிதழை ஆய்வு செய்தபோது, அது போலி சான்றிதழ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் சின்னராசுக்கு தகவல் அனுப்பப்பட்டு, அதன் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் ஆசிரியை ராஜாத்தியின் சான்றிதழை ஆய்வு செய்ததில், அது போலியானது என்பது நிரூபணமானது. இதையடுத்து ராஜாத்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசில் கல்வி மாவட்டத்துறை அதிகாரிகள் புகார் செய்தனர். அதன்பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீசார், இடைநிலை ஆசிரியை மீது போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். அவர் தலைமைறைவாகி விட்டார். இந்நிலையில் ஆசிரியை ராஜாத்தியை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியை பணியில் சேர்ந்த சம்பவம் கோவில்பட்டி கல்வி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Kovilpatti , A school teacher who joined the service after giving false evidence caused a stir near Kovilpatti.
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!