×

தேர்தல் முறைகேடு வழக்கு சூகிக்கு மேலும் 3 ஆண்டு சிறை

பாங்காக்: தேர்தல் முறைகேடு வழக்கில் மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மியான்மரில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில், இந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், ஜனநாயக முறைப்படி அமைக்கப்பட்ட ஆட்சியை கடந்த பிப்வரியில் ராணுவம் கைப்பற்றியது. பிறகு, சூகியின் மீது ஏராளமான ஊழல் வழக்குகளை அது தொடர்ந்தது. இதில், தகவல் தொடர்பு சாதனங்கள் சட்ட விரோதமாக இறக்குமதி செய்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்காமல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறியது, தேசத்துரோக வழக்கு, அரசு நிலத்தை சந்தை விலையை விட குறைந்த வாடகைக்கு விட்டது, அறக்கட்டளைக்கு வழங்கிய நன்கொடையில் வீடு கட்டியது என பல்வேறு குற்றச்சாட்டுகளில் சூகிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் தேர்தல் முறைகேட்டிலும் ஈடுபட்டதாக புதிய குற்றச்சாட்டை ராணுவம் முன் வைத்தது. இந்த வழக்கில் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இத்துடன் சேர்த்து அவருடைய சிறை தண்டனை காலம் 20 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

Tags : Suu Kyi , Suu Kyi jailed for another 3 years in election fraud case
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்