×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பினராயி பேச்சுவார்த்தை: தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் இன்று பங்கேற்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று நடக்கும் தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் முல்லைப் பெரியாறு, சிறுவாணி அணை விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். தென்மண்டல கவுன்சிலின் 30வது கூட்டம், கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம், கோவளத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் இன்று நடைபெறுகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநில முதல்வர்களும், அந்தமான் நிக்கோபர் மற்றும் லட்சத்தீவுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்கின்றனர். மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பகிர்வு, எல்லை பகுதி பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று மதியம் 1 மணியளவில் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.  விமான நிலையத்தில் கேரள மாநில திமுக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு, கோவளம் லீலா பேலஸ் ஓட்டலுக்கு அவர் சென்றார். தொடர்ந்து, நேற்று மாலை கோவளம் அரண்மனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். அப்போது முல்லைப் பெரியாறு, சிறுவாணி அணை விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள், இரு மாநில உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக, இரு மாநில தலைமைச் செயலாளர்களுக்கு இடையே ஆலோசனை நடத்திய பின்னர், முதல்வர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ்,  தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இன்று காலை 10 மணிக்கு தென் மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்குகிறது.

Tags : CM. K. ,Stalin Pinarai ,South Region Council , Chief Minister M. K. Stalin's Pinarayi Talks: Participation in South Zone Council meeting today
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்;...