நம்மால் முடியாத லட்சியம் என்று எதுவுமில்லை ஐஎன்எஸ் விக்ராந்த் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: கொச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தை, கொச்சியில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ‘நம்மால் நிறைவேற்ற முடியாத லட்சியம் என்று எதுவுமில்லை என்பதற்கு, ஐஎன்எஸ் விக்ராந்த் ஒரு உதாரணம்,’ என்று அவர் பேசினார். நாட்டிலேயே  முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில், கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஐஎன்எஸ் விக்ராந்த்  விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டப்பட்டு உள்ளது. கொச்சியில் உள்ள தென்பிராந்திய கடற்படை மையத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், இக்கப்பலை பிரதமர் மோடி  நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

முன்னதாக, விக்ராந்த்தில் நடந்த கடற்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்  கொண்டார். பின்னர், நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது:   ஐஎன்எஸ் விக்ராந்த் ஆத்ம நிர்பார் பாரதத்தின் ஒரு சிறந்த உதாரணமாகும். இது  இந்தியாவுக்கு மிகச்சிறந்த நாளாகும். சர்வதேச அளவில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஐஎன்எஸ்  விக்ராந்த் ஒரு  பதிலாகும். கடல் பகுதிகளில் இந்தியா சந்திக்கும் பெரும் சவால்களுக்கு இந்தக்  கப்பல் ஒரு தீர்வாக அமையும். நம்மால் நிறைவேற்ற முடியாத லட்சியம் என்று எதுவும் இல்லை என்பதை விக்ராந்த் நிரூபித்து காட்டியுள்ளது. இந்தக் கப்பல் புதிய  நூற்றாண்டில் இந்தியாவின் நம்பிக்கையாக விளங்கும். இதன் மூலம்,  இந்தியாவுக்கு புதிய சக்தி கிடைத்துள்ளது.

இந்தியாவுக்கு இது ஒரு சரித்திர  நிமிடமாகும். நம் நாடு ஒரு புதிய சூரியோதயத்திற்கு சாட்சியாகி உள்ளது.  ‘மேக் இன் இந்தியா’ மட்டுமல்ல ‘மேக் பார் தி வேர்ல்டு’ என்பது தான் நம்முடைய  லட்சியமாகும். விக்ராந்தை உருவாக்கியதன் மூலம் உலக நாடுகள் முன் இந்தியா தலை  நிமிர்ந்து நிற்கிறது. ஐஎன்எஸ்  விக்ராந்த் மூலம் இந்தியர்களுக்கு பெரும் கவுரவம் கிடைத்துள்ளது. இதற்கு  முன்பு இது போன்ற அதிநவீன போர்க்கப்பல்களை தயாரிக்கும் திறமை ஒரு சில  வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு மட்டுமே இருந்தது. அது தற்போது இந்தியாவுக்கு  கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடற்படை தளபதி ஆர். ஹரிகுமார்,  கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், கேரள முதல்வர் பினராய் விஜயன் மற்றும்  கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை  நாட்டுக்கு அர்ப்பணித்த பின்னர் பிரதமர் மோடி கப்பலில் ஏறி பார்வையிட்டார்.  இதன் பின்னர் கப்பலில் தேசிய கொடியையும், கடற்படையின் புதிய கொடியையும்  அவர் ஏற்றினார்.

*கடற்படைக்கு புதிய கொடி

கடற்படையில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பயன்படுத்தி வந்த கொடிக்கு பதிலாக புதிய கொடியையும் பிரதமர் மோடி நேற்று அறிமுகம் செய்தார். ஏற்கனவே இருந்த கொடியில் செயின்ட் ஜார்ஜ் சிலுவையுடன் தேசியக்கொடி இடம் பெற்று இருந்தது. புதிய கொடியில் இந்த சிலுவை அகற்றப்பட்டு அதற்கு பதிலாக   சத்ரபதி சிவாஜியின் அரச முத்திரையுடன், அசோக சின்னம் சேர்க்கப்பட்டுள்ளது.

Related Stories: