×

தனி நீதிபதி உத்தரவு ரத்து அதிமுக பொதுக்குழு செல்லும்: எடப்பாடி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: கடந்த ஜூலை 11ம் தேதி நடத்திய அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, கட்சியில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று தொண்டர்களிடையே கோரிக்கை எழுந்தது. இதற்காக, கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது. ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல்கள் வைத்தியநாதன், அரிமா சுந்தரம், வக்கீல் எஸ்.ஆர்.ராஜகோபால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.  அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கட்சி விதிகள் திருத்தம் செய்து, பொதுச்செயலாளர் பதவிக்கு இணையாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்த பதவிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில், ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், கருத்துவேறுபாட்டினால் இருவராலும் ஒற்றுமையாக செயல்பட முடியவில்லை. இதன் காரணமாக கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உள்ளிட்ட எந்த ஒரு தீர்மானமும் இயற்றப்படவில்லை. ஜூலை 11ம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் மீண்டும் ஒற்றைத் தலைமை தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

பொதுவாக ஆண்டுதோறும் நடத்த வேண்டிய வழக்கமான பொதுக்குழு கூட்டும்போதுதான் அதுதொடர்பாக உறுப்பினர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று கட்சி விதி கூறுகிறது. ஆனால், சிறப்பு பொதுக்குழு இதுபோல நோட்டீஸ் கொடுக்க தேவை இல்லை. வழக்கமான பொதுக்குழுவுக்கும், சிறப்பு பொதுக்குழுவுக்கும் வித்தியாசம் உள்ளது. அதேநேரம், இந்த இரு பொதுக்குழுவுக்கும் எழுத்துப்பூர்வமாக உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று கட்சி விதியில் கூறவில்லை. ஜூலை 11ம் தேதி சிறப்பு பொதுக்குழு நடைபெறும் என்று ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்திலேயே அறிவிக்கப்பட்டது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் இருந்ததால், சிறப்பு பொதுக்குழு கூட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூற முடியாது.

சிறப்பு பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையின்படியே கூட்டம் கூட்டப்பட்டுள்ளதால் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறப்பு பொதுக்குழுவில் நிகழ்ச்சி நிரல் குறித்த விளக்கம் ஜூலை 1ம் தேதியே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இடையே விரிசல் இருந்ததால், சிறப்பு பொதுக்குழுவை கூட்ட 2190 பொதுக்குழு உறுப்பினர்கள், கையெழுத்திட்டு அவைத்தலைவரிடம் கோரிக்கை மனுவாக கொடுத்துள்ளனர்.பொதுக்குழு கூட்டுவதற்கு அவைத்தலைவர் கண்டிப்பாக வேண்டும். அவைத்தலைவர் இல்லாமல் கூட்டத்தை கூட்ட  முடியாது. ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதால் விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சிறப்பு பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஆனால், இந்த இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது.  இருவரும் சேர்ந்து சிறப்பு பொதுக்குழு கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அப்படி ஒரு நிலை இருக்கும்போது, இருவரும் சேர்ந்துதான் சிறப்பு பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. இது பொதுக்குழுவை கூட்ட முடியாத நிலைக்குத்தான் வழிவகுக்கும். கட்சி விதிகளின்படி பொதுக்குழுதான் உச்சப்பட்ச அதிகாரம் கொண்டது. விதிகளில் திருத்தம் செய்யவோ, முக்கிய முடிவு எடுக்கவோ நிர்வாக குழுவுக்கு அதிகாரம் தரப்படவில்லை. ஒருவேளை நிர்வாகக்குழுவில் ஏதாவது முடிவு எடுத்தால், அதற்கு பொதுக்குழுவில் ஒப்பதல் பெறவேண்டும். தலைவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கும் பொதுகுக்குழுவில்தான் ஒப்புதல் தரவேண்டும். பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். ஜூன் 28ம் தேதி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடித்ததில், பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் காலாவதி ஆகிவிட்டது என்று கூறியிருந்தார்.

இதன்மூலம், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் எடப்பாடி பழனிசாமி இல்லை என்று தெரியவருகிறது. அதற்கு பிறகு இணை ஒருங்கிணைப்பாளர் என்று கட்சியில் பதவியே இல்லை. அப்படி இருக்கும்போது,  அவரை இணை ஒருங்கிணைப்பாளராகத்தான் பணியாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. ஒப்புதல் அளிக்காததால் இரு பதவிகள் காலியாகிவிட்டதா என்று பிரதான வழக்கில்தான்  முடிவு செய்ய முடியும். உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக சிவில் வழக்கு தொடர முடியாது என்று கூற முடியாது. இரு பதவிகளும் தேர்வு செய்யப்பட்டதற்கு ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கவில்லை, பதவிகள் காலியாகிவிட்டது போன்ற விவகாரத்தில் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. அதை பிரதான வழக்கில்தான் முடிவு செய்ய முடியும். திருநாவுக்கரசு வழக்கில் துணை பொதுச் செயலாளர் கூட்டிய கூட்டத்தால் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய வழக்கில் போட்டி பொதுக்குழு கூட்டப்படாததால் அந்த வழக்கின் உத்தரவு இந்த வழக்கிற்கு பொருந்தாது.

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை என்ற நிலையில் இருவரும் சேர்ந்து பொதுக்குழுவை கூட்ட முடியாது. இருவரும் இணைந்து கூட்ட இயலாத நிலையில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு தள்ள முடியாது. எனவே, ஜூலை 11ம் தேதி சிறப்பு பொதுக்குழுவை கூட்ட அவைத்தலைவர் வெளியிட்ட அறிவிப்பு சரியானதுதான். பெரும்பாலான உறுப்பினர்களின் கோரிக்கையின்படி சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டு பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலை ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக இருப்பதாக கருத முடியாது. எடப்பாடி பழனிசாமி தரப்புக்குத்தான் சாதகமாக உள்ளது. இருவரும் சேர்ந்துதான் நிர்வாக குழு, பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பினால், அதிமுகவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். தனி நீதிபதி தீர்ப்பினால், ஏற்கனவே நிலுவையில் இருந்து வரும் இழுபறி நிலை மேலும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடக்கும் என்று ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடரவில்லை. அந்த தீர்மானத்தை அவர் எதிர்க்கவில்லை. ஆனால் ஜூலை 11ம் தேதி பொதுக்குழ நடப்பதைத்தான் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்று கூற முடியாது. வழக்கமாக நடந்த ஜூன் 23ம் தேதி  பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பிறகு அறிவிக்கப்பட்டு சிறப்பு பொதுக்குழு நடத்தப்பட்டுள்ளது. இது எந்த விதிமீறலும் இல்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.

*இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் கொண்டாட்டம்
தனி நீதிபதியின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்றவுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். ஒற்றைத் தலைமை என்ற அதிமுக தொண்டர்களின் கோரிக்கையை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இனி ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவுதான் என்று எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

*உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு ஓபிஎஸ் பேட்டி
தீர்ப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் சி.திருமாறன் கூறும்போது, ‘‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை என்று தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கு இரு நீதிபதிகள் அமர்வு எந்த கருத்தையும் கூறவில்லை. பிரதான வழக்கில்தான் அது முடிவு செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இருவரின் பதவிகளும் உள்ளதா இல்லையா என்பதை தீர்மானிக்காமல் இதுபோன்ற தீர்ப்பை ஏற்க முடியாது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம். எங்களுக்கு சாதகமான தீர்ப்பு நிச்சயம் வரும்’’ என்றார். மேலும், தேனி மாவட்டம், பெரியகுளம் வீட்டில் இருந்து நேற்று சென்னைக்கு  புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திடம் தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேட்டபோது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து, டெல்லி உச்ச  நீதிமன்றத்தில் அதிமுக சார்பாக மேல்முறையீடு செய்யப்படும்’’ என்றார்.

Tags : High Court of Appeal ,Chennai High Court ,Edapadi , AIADMK general committee to quash single judge's order: Madras High Court sensational verdict in Edappadi's appeal case
× RELATED ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற...