×

மாலத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் தஞ்சமடைந்த கோத்தபய ராஜபக்சே நாளை இலங்கை திரும்புகிறார்: மீண்டும் அசாதாரண நிலை ஏற்பட வாய்ப்பு

கொழும்பு: மாலத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்த கோத்தபய ராஜபக்சே நாளை இலங்கை திரும்புகிறார். அதனால் நாட்டில் மீண்டும் அசாதாரண நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் நடந்த கடுமையான எதிர்ப்பால் அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே (73), கடந்த ஜூலை 13ம் தேதி நாட்டைவிட்டு குடும்பத்துடன் வெளியேறினார். அதன்பின் அவரது ஆதரவாளரான ரணில் விக்ரமசிங்கே நாட்டின் அதிபரானார்.

இலங்கையில் இருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்சே, முதலில் மாலத்தீவுக்கு சென்றார். அதற்கு அடுத்த நாள் சிங்கப்பூருக்கு சென்றார். விசா கால விதிமுறைகள் காலாவதியானதால் ஒவ்வொரு நாடாக அலைந்து சென்ற கோத்தபய  ராஜபக்சே, கடைசியாக தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ளார். இந்த நிலையில் கோத்தபயவின் இளைய சகோதரரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில்  ராஜபக்ச, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சமீபத்தில் சந்தித்து, தனது சகோதரரை மீண்டும் நாடு திரும்ப  அனுமதிக்குமாறும், அதற்கான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் கோரியிருந்தார்.

அதேபோல் அவரது கட்சியான இலங்கை  பொதுஜன பெரமுன கட்சியும் கோத்தபய மீண்டும் நாடு திரும்ப உரிய வழிவகைகளை செய்து தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்தது. இலங்கையின் முன்னாள் அதிபர்களுக்கு வழங்கப்படும் மெய்ப்பாதுகாவலர்கள், வாகனம் மற்றும் தங்குமிடங்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதற்கு, இலங்கை அரசும் உத்தரவாதம் அளித்தது.

அதனால் தாய்லாந்தில் உள்ள கோத்தபய ராஜபக்சே நாளை (செப். 3) நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019ம் ஆண்டில் நாட்டின் அதிபராக பதவியேற்ற கோத்தபயவேக்கு உள்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் மக்கள் மத்தியில் உள்ளதால், அவர் மீண்டும் நாடு திரும்பினால் அசாதாரண சூழல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Gothabaya Rajapakse ,Maldives ,Singapore ,Thailand ,Sri Lanka , Gotabaya Rajapakse, who has taken refuge in Maldives, Singapore and Thailand, will return to Sri Lanka tomorrow: chances of another abnormal situation
× RELATED சிங்கப்பூரில் இருந்து...