ஆளும் பாஜகவுக்கு எதிராக 3வது அணியைவிட பலமான கூட்டணியே தேவை: நிதிஷை சந்தித்த சந்திரசேகர ராவ் கருத்து

பாட்னா: ஆளும் பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்குவதை காட்டிலும் பலமான கூட்டணியே தேவை என்று பீகார் முதல்வரை சந்தித்த சந்திரசேகர ராவ் தெரிவித்தார். தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) தலைவரும், தெலங்கானா முதல்வருமான  சந்திரசேகர ராவ், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகளை  ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவரும், நிதிஷ் குமாரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நிதிஷ் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து சந்திரசேகர ராவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், ‘நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் நிதிஷ் குமாரும் ஒருவர்.

பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பின்னர் முடிவு செய்வோம்’ என்றார்.

தொடர்ந்து, பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்கு என்ன? என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. மேலும், ‘பாஜகவிற்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்குவது எனது வேலையில்லை; பாஜகவுக்கு எதிராக பலமான கூட்டணியை உருவாக்குவதே எனது வேலையாகவும், முயற்சியாகவும் உள்ளது. பாஜக தனது சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டி வருகிறது’ என்றார்.

Related Stories: