×

சில ரேஷன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் வசதி அறிமுகம் செய்து படிப்படியாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை..!

சென்னை: சில ரேஷன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் வசதி அறிமுகம் செய்து படிப்படியாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மாநிலம் முழுவதும் உள்ள 34,773 நியாயவிலைக் கடைகளில் 33377 நியாயவிலைக் கடைகள் கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் 2,02,45,357 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றில் கிராம பகுதிகளில் 16,994 முழுநேரக் கடைகளும், நகர்ப்புறங்களில் 6,942 கடைகளும் ஆக மொத்தம் 23,936 நியாயவிலைக் கடைகள் முழு நேரக் கடைகளாக இயங்கி வருகின்றன. மாநிலம் முழுவதும், 9,441 பகுதிநேரக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் கிராமப்புறத்தில் 8,721 கடைகளும் நகர்ப்புறங்களில் 720 கடைகளும் இயங்கி வருகின்றன. இவை தவிர மலைப் பகுதிகள் வனப்பகுதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளற்ற பகுதிகளில் 3,556 நகரும் நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன.

திண்டுக்கல், தர்மபுரி, தேனி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மலைக்கிராமங்களில் ரேஷன் பொருட்களைக் கொண்டு செல்ல மட்டக்குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாகக் கொண்ட 18,782 நியாய விலைக் கடைகள் முழு நேர நியாயவிலைக் கடைகளாகவும் 9,388 நியாயவிலைக் கடைகள் பகுதிநேரக் கடைகளாகவும் ஆயிரம் முதல் ஆயிரத்தைந்நூறு குடும்ப அட்டைகள் வரை கொண்ட 4,352 நியாயவிலைக் கடைகள் முழுநேர நியாயவிலைக் கடைகளாகவும் 44 கடைகள் பகுதிநேரக் கடைகளாகவும் இயங்கி வருகின்றன.

ஆயிரத்தைந்நூறு முதல் இரண்டாயிரம் குடும்ப அட்டைகள் வரை கொண்ட 704 நியாய விலைக் கடைகள் முழுநேர நியாயவிலைக்கடைகளாகவும், 9 நியாயவிலைக் கடைகள் பகுதி நேரக் கடைகளாகவும், இரண்டாயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் கொண்ட 98 நியாய விலைக் கடைகள் முழுநேர       நியாயவிலைக் கடைகளாகவும் இயங்கி வருகின்றன. கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 33,377 நியாயவிலைக் கடைகளில் 17,473 கடைகள் அரசு கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. 3,211 கடைகள் சொந்த கட்டடங்களிலும் 6,981 கடைகள் வாடகை கட்டடங்களிலும் மற்றும் 5,712 கடைகள் வாடகையில்லா கட்டிடங்களிலும் இயங்கி வருகின்றன.

மாநிலம் முழுவதிலும் உள்ள நியாயவிலைக் கடைகளில் வாடகைக் கட்டடங்களில் இயங்கும் 6,907 கடைகளுக்கு புதிய சொந்த கட்டடம் கட்டுமானம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆண்டொன்றுக்கு 300 கட்டடங்கள் வீதம் கட்ட திட்டமிடப்பட்டு 862 கடைகளுக்கு அரசு புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் 243 நியாயவிலைக் கடைகளுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு இப்புதிய கட்டடங்கள் MGNREGA, MLACDS, MPLADS மற்றும் CSR நிதிகளின் மூலம் கட்டப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதிலும் புதிதாக கட்டப்படவுள்ள நியாயவிலைக் கடைகள் அனைத்தும் ஒரே மாதிரியான வடிவமைப்பினை கொண்டதாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் 500க்கு குறைவான குடும்ப அட்டைகள் உள்ள நியாய விலைக்கடைகளுக்கு 440 சதுர அடிப் பரப்பிலும் 500க்கு அதிகமான குடும்ப அட்டைகளைக் கொண்ட நியாயவிலைக் கடைகளுக்கு 550 சதுர அடிப் பரப்பிலும் வரைபடங்கள் இறுதி செய்யப்பட்டு முறையே ரூபாய் ஏழு இலட்சம் மற்றும் ரூபாய் பத்து இலட்சம் மதிப்பில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் 22,273 பணியாளர்களில் பெரும்பான்மையானோர் பெண்களாக இருப்பதால், புதிதாக கட்டப்படும் கடைகளில் கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடைகளைத் தூய்மையாகப் பராமரிக்கவும், கடையின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பேணிப் பாதுகாக்கவும், குடும்ப அட்டைதாரர்களைக் கண்ணியத்துடன் நடத்தவும், மாநிலம் முழுவதிலுமுள்ள 20,364 விற்பனையாளர்களுக்கு ரூ. 2.04 கோடி செலவில் மாநிலத்திலுள்ள அனைத்து கூட்டுறவுப் பயிற்சி நிலையங்களின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பான்மையான மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களே நேரடியாகவும் பயிற்சி அளித்துள்ளனர்.

அரசாணை எண் 25இன்படி, தேவையுள்ள நியாய விலைக்கடைகளுக்கு ரூ. 9.55 கோடி செலவில் மேசை, நாற்காலி, மின்விளக்கு, மின்விசிறி மற்றும் மின்னணு எடைத்தராசு ஆகியவற்றை கொள்முதல் செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதிலுமுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு தரக்கட்டுப்பாடு தொடர்பான (Quality Control Management) ISO-9000 தரச்சான்றிதழும், Security in Supply Chain Management and Storage-க்கான ISO - 28000 தரச்சான்றிதழும், உணவுப் பொருட்கள் இருப்பு வைப்பதற்குத் தேவையான FSSAI சான்றிதழும் பெறுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நியாயவிலைக் கடைகளின் நிதித்திறனை மேம்படுத்த 892 நியாயவிலைக் கடைகளில், கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்யும் சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் இயங்கி வருகின்றன. மக்களுக்குக் கலப்படமற்ற தரமான நுகர்வோர் பொருட்களை வழங்கும் விதமாக தமிழக அரசின் ஊட்டி தேயிலை. அரசு உப்பு பனை வெல்லம் உள்ளிட்ட காதி பொருட்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் தூள், சிறு தானியங்கள், தேன், மிளகு, காபிப்பொடி, சமையல் எண்ணெய் வகைகள், மாவு வகைகள் மசாலா பொருட்கள். மளிகைப் பொருட்கள், சோப்பு ஆகியவையும், நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில், பரீட்சார்த்த முறையில் IOC யின் 5 கிகி 2கிகி சமையல் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் Google Pay, Paytm போன்ற UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

நியாயவிலைக் கடைகளுக்கு அருகில் தேவையான காலியிடம் இருப்பின், அவ்விடங்களில் 10 MT முதல் 50 MT வரை கொள்ளளவு கொண்ட உணவுப் பொருள் வைக்கும் கிடங்குகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, நியாயவிலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உள்ள மூட்டைகளை தரையில் வைப்பதற்கு பதிலாக பாதுகாப்பாக இரும்பு Pallets-களின் மீது அடுக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாயவிலைக் கடைகளில் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எவர்சில்வர் கொள்கலன்களில் வைத்து விநியோகம் செய்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநிலம் முழுவதிலுமுள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில் 26,272 நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன. அதாவது, ஒரு கிராம பஞ்சாயத்தில் குறைந்தபட்சம் 2 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. எனவே, அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு 2 கிலோ மீட்டருக்கு மேல் பொது மக்கள் பயணிக்க வேண்டிய நிலை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Google Pay ,Paytm ,Minister ,I.Periyaswamy , Steps to introduce Google Pay and Paytm facilities in some ration shops and expand gradually: Minister I.Periyaswamy's report..!
× RELATED தாம்பத்திய வீடியோவை வெளியிடுவதாக...