×

உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; எடப்பாடி ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்: ஓபிஎஸ் அணியினர் சோகம்

சென்னை: உயர் நீதிமன்ற அமர்வு இன்று அளித்த தீர்ப்பையொட்டி எடப்பாடி ஆதரவாளர்கள் சென்னையில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஓபிஎஸ் அணியினர் சோகத்தில் மூழ்கினர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பாலான ஆதரவாளர்களை திரட்டி, எடப்பாடி பழனிசாமி கடந்த ஜுலை மாதம் 11ம் தேதி அதிமுக சிறப்பு பொதுக்குழுவை கூட்டினார்.

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றார். “கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், எனது அனுமதி இல்லாமல் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அங்கீகரிக்க கூடாது” என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து கடந்த மாதம் 18ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தீர்ப்பில், “அதிமுகவில் ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் (ஓ.பன்னீர்செல்வம்), இணை ஒருங்கிணைப்பாளர் (எடப்பாடி பழனிசாமி) ஆகியோர் இணைந்துதான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். அதனால் ஜூலை மாதம் 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது” என்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதியின் தீர்ப்பை கேட்டு, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரம் எடப்பாடி அணியினர், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், “எடப்பாடி அணியினர் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடத்திய பொதுக்குழு செல்லும்” என்று கூறியது. இந்த தீர்ப்பை கேட்டு எடப்பாடி பழனிசாமி அணியினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். மேலும், சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டு முன் ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்து, தீர்ப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

அதேநேரம், இந்த தீர்ப்பால் ஓபிஎஸ் அணியினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த மாதம் 18ம் தேதி தனக்கு சாதகமாக வந்த தீர்ப்பு, இரண்டு வாரத்தில் மீண்டும் இபிஎஸ் அணிக்கு சாதகமாக சென்றுள்ளதால், ஓபிஎஸ் அணியினர் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். உயர்நீதிமன்ற தீர்ப்பையொட்டி எடப்பாடி பழனிசாமி விரைவில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : High Court ,Edabadi ,OPS , High Court judgment echoes; Edappadi supporters celebrate: OPS team mourns
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...