×

கொசு ஒழிப்பு பணியாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை

பொன்னேரி: 3 மாத சம்பளம் வழங்காததால் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வட்டார  வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில், பொது சுகாதாரம் சார்பில் மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளர்களாக சுமார் 40க்கும் மேற்பட்ட சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர் .
இவர்கள் கொரோனா காலத்திலும் சிக்கன் குனியா, மலேரியா, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க 55 ஊராட்சிகளிலும் பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் கொடுக்காததால் குடும்ப நடத்த முடியாமல் தனியார் நிறுவனங்களில் இரவு பணிக்கு சென்று குடும்பம் நடத்தும் அவலம் உள்ளது.  ஊர் திருவிழாக்கள், விநாயகர் சதுர்த்தி மற்றும் பண்டிகை நாட்களுக்குள் கூட குடும்பத்திற்கு பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கும், ஒன்றிய அதிகாரிகளுக்கும் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கொசு ஒழிப்பு பணியாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நெய்த வாயல் ஊராட்சியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகரன் சந்தித்து இப்  பணியாளர்கள் புகார் செய்தனர். பொன்னேரி எம்எல்ஏ சந்திரசேகர் ஒன்றிய குழு தலைவர் ரவி.ஆகியோர் பேசி விரைவில் சம்பளம் வழங்குவதாக தெரிவித்தனர் . உடனடியாக 3 மாதம் சம்பளம் வழங்காவிட்டால் குடும்பத்துடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை வருகிற திங்கட்கிழமை முற்றுகையிடுவோம் என கொசு ஒழிப்பு பணியாளர்கள் தெரிவித்தனர்.இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது‌.


Tags : Regional Development Office , Mosquito control workers lay siege to Regional Development Office
× RELATED 5 மாதமாக வேலை வழங்காததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை