×

மாணவர்கள், ஆசிரியர்கள் பங்களிப்புடன் 100 கல்லூரிகளில் மனித கடத்தல் தடுப்பு குழு: உயர்கல்வித்துறை நடவடிக்கை

சென்னை: மனித கடத்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க தன்னார்வ நிறுவனங்கள் சார்பில், தமிழகம் முழுவதும் 100 கல்லூரிகளில் மாணவ-மாணவிகளின் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கவும், மனித கடத்தலை தடுக்கும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகளை களத்தில் இறக்கும் முயற்சியை தன்னார்வ நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, இந்திய ஜனநாயக நல வாழ்வு நிறுவனம் மற்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் இணைந்து தமிழகத்தில் 100 கல்லூரிகளில் மனித கடத்தல் தடுப்பு குழுவை உருவாக்கி வருகின்றன.

 தற்போது தமிழகத்தில் உள்ள 86 கல்லூரிகளில் இந்த அமைப்பு செயல்பட தொடங்கியுள்ளது. ஒரு கல்லூரியில் குறைந்தபட்சம் 10 மாணவ, மாணவியர், 2 பேராசிரியர்கள் உள்ளிட்ட  ஒரு குழுவை உருவாக்கி, மனித கடத்தலை எவ்வாறு தடுப்பது மற்றும் காணாமல் போனவர்கள் பற்றி தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எங்கு நடக்கிறது என்ற தகவலும் சேகரிக்கப்படுகிறது.

இந்நத தகவல்களை தன்னார்வ நிறுவனங்களிடம் இவர்கள் ஒப்படைக்கின்றனர். அத்துடன் மாணவர்களின் வேலை முடிந்து விடுகிறது. அதனை பெற்றுக் கொண்ட தன்னார்வ நிறுவனங்கள் காவல்துறை உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் நியாயம் கிடைக்க உதவுகின்றனர். மேலும் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து அதனை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தி அவர்களை கண்டறியும் வேலையையும் செய்கின்றனர். ஏற்கனவே நடைமுறையில் உள்ள 1098 என்ற தொடர்பு எண் மூலம் புகார்கள் பெறப்படுகின்றன.

இதுகுறித்து இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனம் அமைப்பை சேர்ந்த ஹரிஹரன் கூறுகையில், ‘‘ காவல்துறையினர், ரயில்வே துறையினர் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களை ஒரு நேர்கோட்டின் கீழ் ஒன்று இணைத்து அவர்களைத் தேடுவதன் மூலம் எளிய முறையில் விரைவாக அவர்களை கண்டறிய முடியும். இதன் மூலம் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் பேஜ்பூரை சேர்ந்த ஒருவர், துபாயை சேர்ந்த ஒருவர் மற்றும் சென்னையை சேர்ந்த ஒருவர் என 3 பேரை கண்டுபிடித்து அவர்கள் குடும்பத்திடம் ஒப்படைத்துள்ளோம். தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர்கள் ஒத்துழைப்பு மற்றும் காவல்துறை ஒத்துழைப்போடு இதனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளோம்,’’ என்றார்.

Tags : Anti-Human Trafficking Committee , Anti-Human Trafficking Committee in 100 Colleges with Student, Faculty Participation: Higher Education Action
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...