தாவூத்தை போட்டு கொடுத்தால் ரூ.25 லட்சம்: தேசிய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு

மும்பை: மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பிரபல நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் ஷகீல் ஷேக் (எ) சோட்டா ஷகீல், மற்றும் ஹாஜி அனீஷ் (எ) இப்ராகிம் ஷேக், ஜாவித் பாட்டீல் (எ) ஜாவீத் சிக்னா மற்றும் இப்ராகிம் முஸ்தாக் அப்துல் ரசாக் மேமன் (எ) டைகர் மேமன் ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாவுத் இப்ராகிமை ஐநா சபை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இவர் உட்பட தாவூத் கூட்டாளிகளான சேர்ந்த சோட்டா ஷகீல் உள்ளிட்டோர் ஆயுத கடத்தல், போதை மருந்து கடத்தல், நிழல் உலக குற்றங்கள், பண மோசடி, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். எனவே, தாவூத் இப்ராகிம் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தாவூத்தின் நெருங்கிய கூட்டாளியான ஷகீல் ஷேக் என்ற சோட்டா ஷகீல் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும். இதேபோல் ஹாஜி அனீஷ் என்ற இப்ராகிம் ஷேக், ஜாவீத் பாட்டீல் என்ற ஜாவீத் சிக்னா மற்றும் டைகர் மேமன் ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சமும் பாிசு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: