ஐஎஸ்எல் கால்பந்து: அக்.7ம் தேதி கொச்சியில் தொடக்கம்

மும்பை: இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நடப்பு ஆண்டுக்கான 9வது தொடர் அக்.7ம் தேதி கொச்சியில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி-ஈஸ்ட் பெங்கால் எப்சி அணிகள் மோதுகின்றன. ஒடிஷா எப்சி, ஜாம்ஷெட்பூர் எப்சி, கோவா எப்சி என மொத்தம் 11 அணிகள் மோதும் இந்தத் தொடரின் லீக் சுற்றுகள் பிப்.26ம் தேதி வரை 22 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, ரசிர்களை அனுமதிக்காமல் கோவாவில் மட்டும் நடந்து வந்த ஐஎஸ்எல் ஆட்டங்கள்,  வழக்கம் போல் சென்னை, பெங்களூர், கொல்கத்தா, புவனேஸ்வரம், கவுகாத்தி, மும்பை , ஜாம்ஷெட்பூர், கோவா ஆகிய நகரங்களில் நடைபெறும்.

உள்ளூர் அணியான சென்னையின் எப்சி மோதும் முதல் ஆட்டம் ஏடிகே அணிக்கு எதிராக அக்.10ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும். சென்னையில் முதல் ஆட்டம் அக்.14ம்  தேதி சென்னை-பெங்களூர் அணிகளுக்கு  இடையே நடக்கும்.

நடப்பு சாம்பியன் ஐதராபாத் அணி அக்.9ம் தேதி மும்பை அணிக்கு எதிராக ஐதராபாத்தில் களம் காண உள்ளது. பிளே ஆப், அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் மார்ச் மாதம் நடக்கும். அதற்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும். இந்த முறை ஆட்டங்களை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.

* கிரிக்கெட் போல்...

ஐஎஸ்எல் தொடரில் இந்த ஆண்டு பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக லீக் சுற்றில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். இந்த முறை முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் கிரிக்கெட்டைப் போன்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். பிளே ஆப் சுற்றில் 2 எலிமினேட்டர் ஆட்டங்கள், 4 அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறும். கடைசியாக இறுதி ஆட்டம் நடக்கும்.

Related Stories: