புதுடெல்லி: முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான விக்ராந்தை, பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். நாட்டிலேயே முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த். கடற்படையின் உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகமும், கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து இதை உருவாக்கி உள்ளன. நாட்டிலேயே இதுவரை கட்டப்பட்ட போர்க்கப்பல்களிலேயே மிகப் பெரியது இதுதான். ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல், கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் முக்கிய பங்கு வகித்தது. அதை நினைவுகூரும் வகையில், இந்த கப்பலுக்கு ஐஎன்எஸ் விக்ராந்த் என பெயரிடப்பட்டுள்ளது. விக்ராந்த் இன்று கடற்படையில் இணைக்கப்படுகிறது. கொச்சியில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, இதை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இது தொடர்பாக கடற்படை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் விக்ராந்த், கடற்படையில் சேர்ப்பதற்கான நேர எண்ணிக்கை தொடங்கியது. நாட்டிற்கும், இந்திய கடற்படைக்கும் இது மிகவும் முக்கியமான நாள். நமது நாட்டின் பெருமை,’ என்று கூறியுள்ளது.