வரலாறு காணாத மழை; பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் வருத்தமளிக்கிறது: அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை

வாஷிங்டன்: பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழையால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் வருத்தமளிக்கிறது என்று அமெரிக்க வெள்ளை மாளிளை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக சிந்த் மாகாணம், கைபர் பக்துன்க்வா, பலோசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கனமழை, வெள்ளத்தால் நாடு முழுவதும் சுமார் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 6 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. 3,457 கிலோ மீட்டர் சாலைகள் அழிந்துள்ள நிலையில், 157 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. 20 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

1,136 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். லட்சக்கணக்கானோர் தங்குமிடம், உணவு, குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். 7,19,558 கால்நடைகள் பலியாகியுள்ளன. அதே நேரத்தில், 50 லட்சம் பேருக்கு டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற கடுமையான நோய்கள் பரவுவதற்கான அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பாகிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் உயிரிழப்பு மற்றும் அழிவுகளுக்கு வருத்தமடைகிறோம்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கு இரங்கலை தெரிவிக்கிறோம். மனிதாபிமான அடிப்படையில் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை கூடுதலாக வழங்கப்படும். பாகிஸ்தானின் நிலைமையை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிப்போம். பாகிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும்’ என்று கூறியுள்ளது.

Related Stories: