×

கடந்தாண்டில் தினமும் சராசரியாக 86 கற்பழிப்புகள்; ராஜஸ்தானில்தான் அதிகம்: புள்ளி விவரங்களை வெளியிட்டது ஒன்றிய உள்துறை அமைச்சகம்..!

டெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சகம், இந்தியாவில் நடந்த குற்றங்கள் என்ற தலைப்பில் வெளியிட்ட புள்ளி விவர  அறிக்கையில், கடந்தாண்டில் தினமும் சராசரியாக 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. அதில் ராஜஸ்தானில்தான் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டில் ‘இந்தியாவில் நடந்த குற்றங்கள்’ என்ற தலைப்பில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு புள்ளிவிவர அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்தாண்டில் நாடு முழுவதும் 31 ஆயிரத்து 677 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, சராசரியாக நாளொன்றுக்கு 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிகளவாக ராஜஸ்தான் மாநிலத்தில் 6 ஆயிரத்து 337 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மத்தியபிரதேசம்-2,947 வழக்குகள், மகாராஷ்டிரா-2,496, உத்தரபிரதேசம்-2,845, டெல்லி -1,250 ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதுபோல், பெண்களுக்கு எதிரான 4 லட்சத்து 28 ஆயிரத்து 278 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதாவது, மணிக்கு சராசரியாக 49 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிகளவாக உத்தரபிரதேசத்தில் மட்டும் 56 ஆயிரத்து 83 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கற்பழிப்பு, கற்பழித்து கொலை, வரதட்சணை கொடுமை, ஆசிட் வீச்சு, தற்கொலைக்கு தூண்டுதல், கட்டாய திருமணம், ஆள் கடத்தல் ஆகியவை அடங்கும். கடந்தாண்டு, நாடு முழுவதும் 52 ஆயிரத்து 974 இணைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் அதிகம். இவற்றில் 70 சதவீத இணைய குற்ற வழக்குகள் தெலுங்கானா, உத்தரபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, அசாம் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில், 15 இணைய பயங்கரவாத வழக்குகளும் அடங்கும்.

Tags : rajasthan ,union interior ministry , An average of 86 rapes per day last year; It is more in Rajasthan: Union Home Ministry released the statistics..!
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...