முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை

திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தென்மண்டல கவுன்சிலின் 30வது கூட்டம் திருவனந்தபுரத்தில் வரும் 3ம் தேதி நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநில முதல்வர்களும், அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு நாள் முன்னதாகவே நாளை திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். நாளை அவர் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து இரு மாநில உறவுகள் குறித்து பேச உள்ளார். குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நிலவி வரும் பிரச்னைகள் குறித்து இருவரும் பேச உள்ளதாக கூறப்படுகிறது. பேபி அணை முன் உள்ள 15 மரங்களை வெட்ட வேண்டும் என்று தமிழகம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது. முதலில் கேரளா இதற்கு சம்மதித்த போதிலும் பின்னர் முடிவை வாபஸ் பெற்று விட்டது.

இதையடுத்து மரங்களை வெட்ட கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி கடந்த வாரம் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தொடர் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேரளாவிடம் முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழு அறிவுறுத்தியுள்ளது. இது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

Related Stories: