×

திடீர் வெள்ளப்பெருக்கு: பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

உடுமலை: உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. திருமூர்த்தி மலை மீது அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இதில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் கடவுள் ஒருங்கே அமைந்த கோயில் அமைந்துள்ளது.

கோயிலின் மேற்பகுதியில் பஞ்சலிங்க அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் இந்த அருவியில் விரும்பி குளிப்பது வழக்கம்.
பருவமழை காரணமாக அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதோடு அணையில் இருந்து உபரியாக வெளியேறும் மழை நீர் வெள்ளம் மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை அடிக்கடி சூழ்ந்து விடுவது வழக்கம். இதேபோல, நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை எதிரொலியாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

நள்ளிரவில் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், பஞ்சலிங்க அருவியில் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் தடை விதித்தனர். இந்நிலையில் நேற்று காலையில் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் நீர்வரத்து சற்றே குறைந்ததை அடுத்து சாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பஞ்சலிங்க அருவியில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவியதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விடுமுறையான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலையில் குவிந்தனர். இப்பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags : Panchalinga Falls , Flash floods: Ban for tourists to bathe in Panchalinga Falls
× RELATED 2வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு...