புழல், செம்பரம்பாக்கம் ஏரி 90 சதவீதம் நிரம்பியது

சென்னை: சென்னை அருகே உள்ள புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் 90 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ணா நீர் தொடர்ந்து பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாகவும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இந்த ஏரிகளிலும் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் 3231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. இதில் 600 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.  சென்னை மக்கள் குடிநீருக்காக 315 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. இது 18.57 சதவீதம் ஆகும். புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 3002 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

நீர்வரத்து 256 கன அடியாக உள்ளது. 205 கன அடி தண்ணீர், சென்னை மக்களின் குடிநீருக்காகவெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் 90.97 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 3269 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 60 கன அடியாக உள்ளது. சென்னை மக்களின் குடிநீருக்காக 176 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது 89.69 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் 132 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இதனால் 12.21 சதவீதம் தண்ணீர் உள்ளது. தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடி. தற்போது இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியதாலும் 40 கன அடி நீர் வருவதாலும் 30 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories: