யுஎஸ் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுக்குள் நுழைந்த செரீனா: 2ம் நிலை வீராங்கனை அனெட்டை வீழ்த்தி அசத்தல்

நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று போட்டிகள் இன்று நடந்தது. இதில் முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் 40 வயது செரீனா வில்லியம்ஸ், 2ம் நிலை வீராங்கனையான எஸ்டோனியாவின் 26 வயதான அனெட் கொண்டவீட்டுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் முதல் செட் டைப் ரேக்கர் வரை சென்ற நிலையில் 7(7)-6(4) என செரீனா கைப்பற்றினார்.

2வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய அனெட் 6-2 என எளிதாக தன்வசப்படுத்தினார். வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனுபவத்தை வெளிப்படுத்திய செரீனா 6-2 என கைப்பற்றினார். முடிவில்7(7)-6(4), 2-6, 6-2 என வெற்றிபெற்ற செரீனா 3வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த தொடருடன் செரீனா டென்னிசில் இருந்து ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை இறுதிபோட்டி வரை முன்னேறிய 19 வயதான கனடாவின் லேலா பெர்னாண்டஸ், 3-6, 6-7 என ரஷ்யாவின் லுட்மில்லா சாம்சோனோவாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா, 6-2, 4-6, 2-6 என செர்பியாவின் அலெக்ஸாண்ட்ராவிடம் வீழ்ந்தார். பிரான்சின் கரோலின் கார்சியா, 6-3, 6-1 என ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்காயாவையும், அமெரிக்காவின் கோகோ காப், 6-2, 7-6 என ருமேனியாவின் எலெனாவையும் வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தனர். 3ம் நிலை வீராங்கனையான கிரீசின் மரியா சக்கரி, சீனாவின் வாங்சியூவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ஷெல்பி ரோஜர்ஸ் ஆகியோரும் 3வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

Related Stories: