மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரால் காவிரி ஆற்றில் வெள்ளம்; பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிக்கை

சென்னை: மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் அதிக அளவு உபரி நீரினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவர்களது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மழை விபரம்

தென்மேற்கு பருவமழைக் காலத்தில், 01-06-2022 முதல் 31-08-2022 முடிய 392.1 மி.மீ. மழை பெய்துள்ளது.  இது இயல்பான மழை அளவைக் காட்டிலும் 87 விழுக்காடு கூடுதல் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 36 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி  10.04  மி.மீ. ஆகும்.

2அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்

வ.எண்    மாவட்டம்    பதிவான மழை அளவு (மி.மீ)

1    நாகப்பட்டினம்    32.91

2    பெரம்பலூர்    29.64

3    மயிலாடுதுறை    27.60

4    சிவகங்கை    22.63

5    செங்கல்பட்டு    21.03

6    சேலம்    20.85

7    கடலூர்    19.79

8    கோயம்புத்தூர்    17.89

9    திருவாரூர்    17.44

10    காஞ்சிபுரம்    16.72

11    தேனி    16.12

12    தஞ்சாவூர்    15.54

13    அரியலூர்    14.32

14    திண்டுக்கல்    14.25

15    நீலகிரி    12.36

16    புதுக்கோட்டை    10.29

17    நாமக்கல்    10.27

18    தூத்துக்குடி    8.22

19    விழுப்புரம்    8.03

20    திருச்சிராப்பள்ளி    7.78

21    திருவண்ணாமலை    7.05

22    இராணிப்பேட்டை    6.79

23    கன்னியாகுமரி    6.21

24    தருமபுரி    5.00

வானிலை முன்னெச்சரிக்கை

01.09.2022 – கனமழை முதல் மிக கனமழை வரை - நீலகிரி மற்றும் கோயம்புத்தூர்.

கனமழை- தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி. மேலும் தமிழகத்தின் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

02.09.2022 – கனமழை – நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி. மேலும், தமிழகத்தின் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

03.09.2022 மற்றும் 04.09.2022 – கனமழை – நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை. மேலும் தமிழகத்தின் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

முன்னெச்சரிக்கை

மேட்டூர் அணையின் நீர்மட்டம், அணையின் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால், இன்று (01-09-2022) காலை 11.30 மணி அளவில் மேட்டூர் அணையிலிருந்து 55,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கொள்ளிடம் ஆற்றில் அதிகபடியான கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் பவானி அணையிலிருந்து 9,500 கன அடி நீர்  வெளியேற்றப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாத்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவிரி ஆற்றுப்படுகை அமைந்துள்ள அனைத்து மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தொடர்புடைய கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 01.09.2022 அன்று குமரி பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழகத்தை ஒட்டியுள்ள கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும், 02.09.2022 அன்று குமரி பகுதிகளில் 40 முதல் 50 மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கை செய்தி, மீன்வளத் துறை மூலமாக மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணையிலிருந்து தொடர்ந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, பொதுவான எச்சரிக்கை நடைமுறை (CAP – Common Alert Protocol) மூலம் 17.69 இலட்சம் செல்லிடப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி மீட்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிருவாகத்துடன் இணைந்து செயல்படும் வகையில், ஈரோடு, நாமக்கல் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு, மாவட்டம் ஒன்றுக்கு ஒரு குழு வீதம், 75 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்களும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 80 வீரர்களைக் கொண்ட ஒரு குழுவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண். 94458 69848 மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம். மேலும், கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

இதுமட்டுமின்றி, பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் ஜே.சி.பி. இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைத்திட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்படும் கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்த வெள்ளம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அரசு மற்றும் மாவட்ட நிருவாகம் மூலம் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கூர்ந்து கவனித்து செயல்படுமாறும், மாவட்ட நிருவாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: